மேட்டுப்பாளையம் பகுதியில் தொடர்ச்சியாக பேருந்து விபத்துகள் நேர்வதை குறைக்க ஏதேனும் நடவடிக்கைகள் எடுக்கப்படுமா என இன்று கோவை வந்த போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு அவர் இதுகுறித்து நடவடிக்கை துவங்கியுள்ளதாக கூறினார்.

சமீபத்தில் மேட்டுப்பாளையம் சாலையில் அதிக விபத்துக்கள் நடப்பதாக மக்களிடத்தில் இருந்து புகார் வந்துள்ளது. அதுகுறித்து போக்குவரத்து துறை துணை ஆணையரை விசாரிக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அந்த விசாரணை இந்த வாரத்தில் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று மேட்டுப்பாளையம் வட்டார போக்குவரத்து அலுவலர் கணேசன், மோட்டார் வாகன ஆய்வாளர் சிவகுமார் தலைமையிலான அலுவலர்கள் காரமடை டீச்சர்ஸ் காலனி அருகே மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை நோக்கி சென்ற தனியார் பேருந்துகள் மற்றும் கிராமங்களுக்கு இயக்கப்படும் மினி பேருந்துகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வுக்கு பின்னர், பயணிகளிடம் அதிகாரிகள் கேட்டுக்கொண்டதாவது:-

பேருந்தை ஓட்டுனர்கள் அதிவேகமாக ஓட்டினாலோ, செல்போன் பேசிக்கொண்டு வாகனத்தை இயக்கினாலோ, நடத்துனர் பயணிகளை படியில் தொங்கும் படி வாகனத்தில் பயணம் செய்ய அனுமதித்தாலோ, ஏர் ஹாரன், மியூசிக்கல் ஹாரன் போன்றவற்றை பயன்படுத்தினாலோ, போநட் (Bonnet) அதாவது என்ஜின் மேற்பகுதியில் யாரையாவது அமரவைத்து சென்றாலோ ஒரு புகைப்படம் அல்லது வீடியோ எடுத்து RTO அலுவலகத்திற்கு அனுப்புங்கள். 1 மணி நேரத்தில் நடவடிக்கை எடுப்போம் என்றனர்.