கர்நாடகாவில் விற்கப்படும் பாணிபூரிகளில் தரம் இல்லை என உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அங்கு அத்துறையினர் 4 நாட்களுக்கு முன்னர் ஆய்வு நடத்தினர். அந்த ஆய்வில் 260 மாதிரிகள் உணவகங்களில் இருந்தும் கடைகளில் இருந்தும் பெறப்பட்டது.

அவற்றில் 41 மாதிரிகளில் பூரிகளுடன் வழங்கப்படும் காரமான நீரில் பச்சை நிறம் மிகுதியாக தெரியவேண்டும் என செயற்கை நிறமூட்டிகள் அதிகம் சேர்க்கப்படுவதை கண்டறிந்தனர். இவற்றால் புற்றுநோய் உண்டாகும் அபாயம் இருக்கிறது. மேலும் 18 மாதிரிகள் மனிதர்கள் உண்ணக்கூடிய தன்மை அற்றது எனவும் தெரியவந்தது. 

கர்நாடகாவில் இப்படிப்பட்ட சம்பவம் நடைபெற்றதை அடுத்து நேற்று தமிழகம் முழுவதும் முன்னெச்சரிக்கையாக உணவு பாதுகாப்பு துறை சார்பில் ஆய்வுகள் நடத்தப்பட்டது. அதன் ஒருபகுதியாக கோவையில் நேற்று ஆய்வுகள் துவங்கின.

கோவை மாவட்ட நியமன அலுவலர் தமிழ்செல்வன்  தலைமையில் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் அடங்கிய குழு பிரிந்து கோயம்புத்தூர் மாநகரின் பல பகுதிகளில் பாணிபூரி விற்பனை செய்யும் கடைகள் மற்றும் பாணிபூரி தயாரிக்கப்படும் இடங்கள், துரித உணவு விற்பனை செய்யும் தள்ளுவண்டி கடைகள் ஆகியவற்றில் கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். 

இத்தொடர் கள ஆய்வில் இதுவரை 73 கடைகளில் ஆய்வு செய்ததில், 16 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டும், 4 உணவு மாதிரிகளும், தமிழ்நாடுஅரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் உபயோகித்திற்காக 6 கடைகளுக்கு அபராதமாக ரூ.12000/- விதிக்கப்பட்டுள்ளது. 

மேலும் பாணிபூரி விற்பனை செய்யும் கடைகள் மற்றும் பாணிபூரி தயாரிக்கப்படும் இடங்களில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வில் 73 சில்லரை விற்பனையாளர்கள் மற்றும் 4 தயாரிப்பு இடங்களில் அதிக செயற்கை நிறமூட்டி சேர்க்கப்பட்ட 65 லிட்டர் பாணிபூரி மசாலா 57 கிலோ தரமற்ற உருளைக்கிழங்கு காளான் 5 கிலோ மற்றும் 19 கிலோ உருளைக்கிழங்கு மசாலா, செய்திதாள்களை பயன்படுத்தி பறிமாறப்பட்ட பஜ்ஜி, போண்டா போன்ற உணவு பொருட்கள் மற்றும் அதிக நிறமி சேர்க்கப்பட்ட சிக்கன் 65, காளான் மசாலா போன்ற 15 கிலோ உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் ரூ.28,200/- ஆகும்.

அதில் 4 உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு உணவு பரிசோதனைக்காக உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. பகுப்பாய்வு அறிக்கையின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர் மற்றும் விற்பனையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் மற்றும் இக்கள ஆய்வு தொடர் நடவடிக்கையாக மேற்கொள்ளப்படும்.

காந்திபுரம், V.O.C பூங்கா, காந்தி பார்க், ஆர்.எஸ்.புரம், பீளமேடு மற்றும் சித்ரா, சிங்காநல்லூர், கணபதி சாய்பாபா காலனி, சரவணம்பட்டி, வடவள்ளி, டவுன் ஹால், இராமநாதபுரம், உக்கடம், சுந்தராபுரம், குனியமுத்தூர் சுற்று வட்டார பகுதிகள் மற்றும் கிணத்துக்கடவு, தொண்டாமுத்தூர், மதுக்கரை, பொள்ளாச்சி, வால்பாறை மேட்டுப்பாளையம், அன்னூர், துடியலூர், பெரியநாயக்கன்பாளையம் போன்ற இடங்களில் ஆய்வுகள் நடைபெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.