விரைவில் துவங்க உள்ள கோவை மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்டத்தில் வரவுள்ள 2 வழித்தடங்களில் ஒரு வழித்தடம் சத்தி சாலை வழியே அமைகிறது. இது கோவை ரயில் நிலையம் துவங்கி சத்தி சாலையில் உள்ள வலியம்பாளையம் பிரிவு வரை 14.4 கிலோமீட்டர் தூரத்திற்கு அமைகிறது. 

ஏற்கனவே கோவை மாநகரம் வழியே செல்லும் சத்தி சாலையின் ஒரு பகுதியான டெக்ஸ்டூல் பாலம் துவங்கி ப்ரோ ஜோன் மால் வரையிலான 3 கி.மீ சாலையில் விரிவாக்கம் செய்ய நெடுஞ்சாலைத்துறை ரூ. 54 கோடி ஒதுக்கி உள்ளது. இந்த திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்த வேண்டும். இந்நிலையில் இதே பகுதியில் மெட்ரோ ரயில் திட்டத்திற்காகவும் நிலம் கையகப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. 

தற்போது சத்தி சாலை வழியே உள்ள கணபதி டெக்ஸ்டூல் பாலம் முதல் சூர்யா மருத்துவமனை ஜங்ஷன் வரை உள்ள 1.1 கிலோமீட்டர் நிலத்தை மெட்ரோ ரயில் திட்டதற்காக கையகப்படுத்த ரூ. 154 கோடியை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஒதுக்கியுள்ளது.

இதற்கான பணிகள் விரைவில் நடைபெற உள்ளது. இந்தப் பணிகளை மெட்ரோ ரயில் அதிகாரிகளுடன் கோவை மாநகராட்சி அதிகாரிகள் இணைந்து செய்வார்கள். இவர்களுடன் வருவாய்த் துறையும் இந்த பணியில் ஈடுபடும்.

சத்தி சாலை வழித்தடம் இல்லாமல் அவிநாசி சாலை வழித்தடத்திலும் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. உக்கடம் பஸ் ஸ்டாண்ட் துவங்கி நீலாம்பூர் வரை 20.4 கிமீ தூரத்திற்கு அவிநாசி சாலை வழித்தடம் இருக்கும்.

எனவே இந்த இரு வழித்தடத்திலும் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்த தேவையான நிலத்திட்ட ஆய்வு பணிகளை முன்னெடுக்க சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ரூ. 2 கோடியை ஒதுக்கி இருக்கிறது. 

இதை வைத்து கோவை மாநகராட்சி இந்த ஆய்வை நடத்தி விரிவான அறிக்கையை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் சமர்ப்பிக்கும். அதைக் கொண்டு மெட்ரோ ரயில் நிறுவனம் நிலம் கையகப்படுத்தும் பணிகளை இந்த இரண்டு வழித்தடங்களில் நடத்தும். நிலம் கையகப்படுத்தும் பணிகள் நிறைவடைந்த பின்னர் சத்தி சாலையில் விரிவாக்க பணிகள் நடைபெறும்.