கோவை மருத்துவமனையில் 4 மாத ஆண் குழந்தை மரணம்!
- by CC Web Desk
- Feb 20,2025
கோவை ரேஸ் கோர்ஸ் (பந்தய சாலை) பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 4 மாத குழந்தை அறுவை சிகிச்சைக்கு முன்னதாகவே உயிரிழந்த சம்பவம், அங்கே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை விளாங்குறிச்சி பகுதியைச் சேர்ந்த மனோஜ் குமார்- புவனேஸ்வரி தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது.
சத்தி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் இந்த ஆண் குழந்தை பிறந்துள்ளது. பிறவியிலேயே ஆசனவாயு முழுமை அடையாமல் இருந்துள்ளது. எனவே அந்த மருத்துவமனையில் மலக்குடலை மட்டும் வெளியே எடுத்து தற்காலிகமாக அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.
4-5 மாதங்கள் கழித்து குழந்தைக்கு மலக்குடல் ஆசன வாயு அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம் என்று தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் குழந்தையின் பெற்றோர்கள் பந்தய சாலை பகுதியில் உள்ள தனியார் குழந்தைகள் மருத்துவமனையில் நேற்று முன்தினம் அறுவை சிகிச்சைக்காக குழந்தையை அனுமதித்துள்ளனர்.
இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அறுவை சிகிச்சை நடைபெறுவதற்கு முன்னதாகவே குழந்தை உயிரிழந்தது.
அறுவை சிகிச்சைக்கு முன்பு கொடுக்கப்படும் எனிமா எனும் மருந்தை செவிலியர் ஒருவர் அளவிற்கு அதிகமாக குழந்தைக்கு கொடுத்ததாகவும், அது குழந்தைக்கு ஒத்துக்கொள்ளாமல் வாந்தி எடுக்க, மருந்தை நிறுத்திக் கொள்ளுமாறு குழந்தையின் குடும்பத்தினர் அறிவுறுத்திய நிலையில், அதை செவிலியர் கேட்காமல் தொடர்ந்து மருந்தை கொடுத்ததாக இந்த சம்பவத்தில் மருத்துவமனை மீது குற்றம்சாட்டப்படுகிறது.
குழந்தை இறப்பிற்கு முழு காரணமும் மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியப் போக்கும் அந்த செவிலியரும் தான் என குற்றம் சாட்டினர். இது குறித்து பந்தய சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை முடிந்த பின்பே குழந்தையின் இறப்பிற்கான காரணம் தெரியவரும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மருத்துவமனை தரப்பில் கேட்ட போது குழந்தை வேறொரு மருத்துவமனையில் இருந்து சிகிச்சைக்காக இங்கு அனுமதிக்கப்பட்டதாகவும் முழு விவரங்களையும் காவல்துறையினரிடம் தெரிவித்து விட்டதாக கூறினர்.மேலும் சிகிச்சைக்காக பெற்றோர்கள் செலுத்திய ரூ.1.5.லட்சம் பணத்தையும் திருப்பிக் கொடுக்க இருப்பதாக தெரிவித்தனர்.