கோவை மாநகராட்சியில் ஒவ்வொரு வாரம் செவ்வாய்க்கிழமைகளில் காலை 10 மணி முதல் மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும்.

இக்கூட்டத்தில் மேயரிடம் கோவை மாநகராட்சி பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், சாலை வசதி, மின்விளக்குகள், குடிநீர் வசதி, பாதாள சாக்கடை, தொழில்வரி, சொத்துவரி, காலியிடவரி, புதிய குடிநீர் இணைப்பு, பெயர் மாற்றம், மருத்துவம், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்த கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை நேரில் வந்து வழங்க முடியும்.

இந்த கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும் மனுக்கள் மீது நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகளுக்குஉத்தரவு மேயரால் வழங்கப்படும் என்பதால் இதில் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு தங்கள் குறைகளை மனுக்களாக வழங்குவர்.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நாள் முதல் கடந்த 2 மாதங்களாக கோவை மாநகராட்சியில் இந்த கூட்டம் நடைபெறவில்லை.

இந்நிலையில், தேர்தல் முடிவடைந்ததை அடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகளும் முடிவுக்கு வந்தன. இதையடுத்து அதற்கடுத்து வந்த  செவ்வாய்க்கிழமை (11.06.2024) இந்த கூட்டம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நிர்வாக காரணத்தால் அக்கூட்டம் நடைபெறாது என கோவை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கடுத்த செவ்வாய் நாளை(18.6.24) வருகிறது. இந்த கூட்டம் நாளையாவது நடைபெறுமா என எதிர்பார்க்கப்பட்டநிலையில், நாளை மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் காலை 11.00 மணிக்கு மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்  நடைபெறும் என கோவை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.