உள்ளூரில் உற்பத்தியாகும் ஐபோன் 17 ... கோவை நிறுவனத்துடன் பேச்சுவார்த்தையில் ஆப்பிள் நிறுவனம் ?
- by David
- Mar 19,2025
உலக அளவில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் - கைபேசிக்கு மிகப்பெரும் ரசிகர் படையே உள்ளது. 2023ல் 90 லட்சம் ஐபோன்-கள் இந்தியாவில் விற்பனையான நிலையில் சென்ற ஆண்டில் மட்டும் 1.2 கோடி ஐபோன்-கள் நமது நாட்டில் விற்கப்பட்டுள்ளது.
2024 நிதியாண்டில் உருவாக்கப்பட்ட மொத ஐபோன் தயாரிப்பில் இந்தியாவில் உள்ள ஆப்பிளின் உற்பத்தி நிறுவனங்கள் 14 முதல் 15% வரை உற்பத்தி செய்து கொடுத்துள்ளன. மேலும் 2027ல் இந்த பங்கு 26-30% வரை செல்ல சாத்தியங்கள் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சீனாவை தான் முதலில் ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன்-கள் தயாரிப்புக்கு அதிகம் நம்பி வந்தது. ஆனால் இப்போது சீனாவை தாண்டி இந்தியா மீது பெரும் நம்பிக்கை வைத்துள்ளது ஆப்பிள் நிறுவனம்.
கோவைக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம்?
தற்போது உள்ளூரிலேயே உற்பத்தியை அதிகரிக்க ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுவருகிறது. அடுத்து வரும் ஐபோன் 17 இந்தியாவில் அதிகம் உற்பத்தி செய்ய சூழல் உள்ளது. இந்த நிலையில், இந்தியாவின் மிகப்பெரும் 2 நிறுவனங்களுடன் ஆப்பிள் தங்கள் ஐபோன் தயாரிப்புகளுக்கு தேவையான பாகங்களை உற்பத்தி செய்து கொடுக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இதில் விப்ரோ (Wipro) மற்றும் கோவையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் உலக புகழ் பெற்ற லட்சுமி மெஷின் ஒர்க்ஸ் (LMW) ஆகிய 2 நிறுவனங்களிடம் ஆப்பிள் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக தகவல் வெளிவந்துள்ளது. இதே தகவலை தி எகனாமிக் டைம்ஸ் பத்திரிக்கையும் தெரிவிக்கின்றது. விப்ரோ உடன் அடுத்தகட்ட பேச்சுவார்த்தையும், லட்சுமி மெஷின் ஒர்க்ஸ் நிறுவனத்துடன் ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தையும் நடைபெற்றுவருகிறது.
லட்சுமி மெஷின் ஒர்க்ஸ் நிறுவனம் இஸ்ரோ நிறுவனத்துக்கே பாகங்கள் உற்பத்தி செய்துகொடுத்துவருகிறது. ஆப்பிள் நிறுவனத்துக்கு பாகங்கள் உற்பத்தி செய்துகொடுக்க அதனால் நிச்சயம் முடியும். இது நடந்ததால் கோவைக்கு அது ஒரு பெருமையான தருணமாக அமையும் என்கின்றனர் இந்த விஷயத்தை அறிந்தவர்கள்.