நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் ஹாசன் தான் அரசியலுக்கு முனதாகவே வந்திருக்க வேண்டும் எனவும் இந்த வயதில் அரசியலுக்கு வந்ததற்கு நான் மன்னிப்பு தான் கேட்க வேண்டும் எனவும் கோவையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக மக்கள் நீதி மய்யத்தின் கோவை மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டு பேசினார். அப்போது "கலைஞர் என்னை திமுகவிற்கு வருமாறு அழைத்தார் அப்போது நான் கம்யூனிஸ்ட் கட்சியில் சேரப்போகிறேன் என சொல்லியிருக்க வேண்டும் அப்பா காங்கிரசில் இருப்பதால் காங்கிரசில் சேர்கிறேன் என சொல்லியிருக்க வேண்டும். அப்போதே அரசியலில் இறங்கி இருக்க வேண்டும்," எனவும் தாமதமாக அரசியலுக்கு வந்ததற்காக மன்னிப்பு கேட்பதாகவும் கூறினார்.
நாடாளுமன்ற தேர்தலில் தன்னை கோவையில் போட்டியிட கட்சியினரிடம் இருந்து அழைப்பு வருகிறது என கூறிய அவர் கோவையில் 6 சட்ட மன்ற தொகுதிகள் உள்ளன, மொத்தமாக அனைத்து பூத்திலும் வேலை செய்ய 40,000 பேர் வேண்டும் எனவே தன்னை கூப்பிடுவது மட்டும் போதாது, இந்த தேர்தலுக்கு வேலை செய்ய 40,000 பேரை தயார் செய்ய வேண்டும் எனவும் இயன்றதை செய்யுங்கள் என்று கூறிக்கொள்வதாகவும் தெரிவித்தார்.
"எனக்கு மூக்கு உடைத்தாலும் பரவாயில்லை, மருந்து போட்டு வந்து மீண்டும் கோவையில் நிற்பேன்... தேர்தலில் 40 இடங்களிலும் நீங்கள் வேலை செய்ய தயாராக வேண்டும்", எனவும் கூறினார்.