கோவை மருதமலை பகுதியில் உணவு தேடி ஊருக்குள்ள உலா வரும் ஒற்றை காட்டு யானையை  வனப் பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

கோவை, மருதமலை  பாலாஜி நகர் பகுதியில் உணவு தேடி நேற்று இரவு உலா வந்த ஒற்றை காட்டு யானை அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டின் கேட்டை உடைத்து வீட்டுக்குள் நுழைய முயன்றது.

இதனால் வீட்டில் இருந்தவர்கள் அச்சம் அடைந்து, உடனடியாக வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் சம்பவ இடத்திற்கு வந்த வனத் துறையிரை, யானையை வனப் பகுதிக்குள் விரட்டினர்.  

மேலும் அப்பகுதியில் யானை உலா வருவதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். இந்நிலையில் அந்த வீட்டின் அருகே உள்ள மற்றொரு வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் இந்த காட்சிகள் பதிவாகி உள்ளது.

இதேபோல் மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு செல்லும் படிக்கட்டு பாதையில் இரண்டு யானைகள் கடந்து செல்லும் செல்போன் வீடியோ காட்சிகள் மற்றும்  மலைப் பாதையில் காட்டு யானைகள் கடந்து செல்லும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பதிவு செய்யப்பட்டு வைரலாகி வருகிறது.