கோவையில் இருந்து திருச்சி சென்ற அரசு பேருந்தில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சூலூரில் இருந்து காங்கேயம் செல்ல வழக்கமாக ரூ.40 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் இந்த பேருந்தில் ரூ.110 வசூலிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் பயணிகள் அதிருப்தி அடைந்து ஓட்டுனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே குளிர் சாதன வசதி கொண்ட பேருந்துக்கு வசூலிக்கப்படும் கட்டணத்தை சாதாரண பேருந்தில் வசூலித்ததாக பயணிகள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நடைபெற்ற பேருந்தில் பயணி ஒருவர் ஓட்டுனரிடம் இதுபற்றி கேள்வி எழுப்பும் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.

ஏன் டிக்கெட் விலை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என சொல்லி பயணிகள் வாகனத்தில் ஏற்றவில்லை என பயணி அந்த வீடியோவில் ஓட்டுனரை பார்த்து கேட்கிறார். அதற்கு அந்த ஓட்டுநர் "நீங்கள் கட்டணம் என்ன விலை என்று கேட்டு பேருந்தில் ஏறியிருக்க வேண்டும்" என பதிலுக்கு வாதாடுகிறார்.

இந்த பேருந்து ஏ.சி. பேருந்தாக இருந்தால் கூட விலை கேட்டு ஏறச்சொல்வதில் ஒரு நியாயம் இருக்கிறது என கேள்வி எழுப்பிய அந்த பெண் பயணி, ஏ.சி. வசதி உள்ள பேருந்தாக்கான டிக்கெட்டை எதற்காக பயணிகளுக்கு கொடுத்தீர்கள்? இது ஏ.சி. பேருந்துக்கான டிக்கெட் கொடுக்கும் கருவியில் இருந்து வழங்கப்பட்ட டிக்கெட் தானே என கேட்க, தெரியாமல் இந்த கருவியை எடுத்து வந்துவிட்டோம் என கூறுவது காட்சியாகி உள்ளது.