சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் உச்ச நீதிமன்றம் இன்று (26.9.2024) ஜாமீன் வழங்கியது.
வாரந்தோறும் திங்கள், வெள்ளிக்கிழமைகளில் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு சென்று கையெழுத்திட வேண்டும்; ரூ.25 லட்சம் சொந்த பிணை தொகை மற்றும் அதற்கு இணையான இரு பிணையதாரரின் பிணையை வழங்க வேண்டும்; சாட்சி, ஆதாரங்களை அழிக்க முற்படக்கூடாது; வெளிநாடு செல்ல தடை; பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும்; விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் மற்றும் உரிய காரணங்கள் இல்லாமல் வாய்தா கோரக் கூடாது போன்ற நிபந்தனைகளுடன் அவர் இன்று ஜாமின் பெற்றுள்ளார்.
471 நாட்கள் சிறையில் இருந்த செந்தில் பாலாஜிக்கு கிடைத்துள்ள ஜாமீனை கோவையில் திமுகவினர் கொண்டாடிவருகின்றனர். பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
பல்வேறு தகவல்கள் படி அவர் சிறையில் இருந்தாலும் 2024 பாராளுமன்ற தேர்தலில் கட்சி சார்பில் கோவையில் போட்டியிட யாரை நிறுத்தலாம் என வியூகம் அமைத்துக்கொடுத்தவர் எனவும், அண்மையில் மேயர் தேர்தலில் கூட யாரை திமுக கோவையில் முன்னிறுத்தலாம் எனவும் பரிந்துரை செய்தது அவர்தான் எனவும் கருதப்படுகிறது.
தமிழக முதலமைச்சர் ஸ்டாலினால் கோவை மாவட்டத்தின் முதல் பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டவர் செந்தில் பாலாஜி என்பதால், கோவையின் தேவைகள் மீது கவனத்தை அவர் செலுத்தி வந்தார்.
பொது மக்களிடம் குறைகளை நேரடியாக கேட்டுவந்து, அதற்கான தீர்வுகளை வழங்க அவர் பல முயற்சிகளை முன்னெடுத்தார். எனவே, கோவையில் செந்தில் பாலாஜிக்கு கிடைத்த ஜாமீன் செய்தியால் காலையில் இருந்தே கொண்டாட்டமாக தான் இருந்து வருகிறது.
செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைத்திருப்பது என்பது ஒரு நல்ல செய்தி எனவும் உச்ச நீதிமன்றம் ஒரு சரியான முடிவை கொடுத்துள்ளது என இன்று கோவை வந்த தமிழக வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதை மிகப்பெரிய மகிழ்ச்சிக்குரிய செய்தியாக நாங்கள் (திமுகவினர்) எடுத்துக் கொள்கிறோம். அவருக்கான அமைச்சர் பொறுப்பு குறித்து தலைமை தெரிவிக்கும். எங்களைப் பொறுத்தவரை இது ஒரு மகிழ்ச்சியான செய்தியாக வந்துள்ளது தெரிவித்தார்.
மேலும் இன்று காலை முதலே கோவை குணியமுத்தூர் பகுதியில் குவிந்த தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து அந்த வழியாக சென்ற பேருந்து பயணிகள் மற்றும் இரண்டு நான்கு சக்கர வாகனத்தில் சென்றவர்களுக்கு இனிப்பு வழங்கினர். கோவை உக்கடம் பகுதியில் திமுக இளைஞரணியினர் பொதுமக்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கியும், இனிப்புகள் வழங்கியும் பட்டாசு வெடித்தும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவையில் அரசியல் சார்ந்த கருத்துக்களை போஸ்டர் மூலமாக வெளிப்படுத்தும் இடமாக மாறிவரும் லங்கா கார்னர் பகுதியில் செந்தில் பாலாஜி வெளியாவதை கொண்டாடும் விதமாக போஸ்டர்கள் ஒட்ட பட உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்றை காட்டிலும் நாளை அவர் வெளிவரும்போது கோவையில் உற்சாகத்துக்கு பஞ்சமிருக்காது என தெரிகிறது. கொங்கு பகுதியில் திமுகவிற்கு வலு சேர்க்கக்கூடிய தலைவராக திமுக தலைமை அவரை பார்க்கிறது.
அட்டாக் செய்யும் பாஜக!
பிணை கிடைத்துள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் செயல்களை அமலாக்கத்துறை தீவிரமாக கண்காணிக்கப்பட வேண்டும் என பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கோவையில் கருத்து தெரிவித்துள்ளார்.
செந்தில் பாலாஜியை இன்று தியாக சுடராக பார்க்கும் முதலமைச்சர் அவர் அதிமுகவில் இருந்த போது கடுமையான குற்றச்சாட்டுகளுடன் விமர்சித்தார் என்பதை தாங்கள் ஞாபகப்படுத்த விரும்புகிறோம் என்றார்.
செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் கொடுத்துள்ளது. நிபந்தனைகளை அவர் சரியாக பின்பற்றுகிறாரா என்பதை அமலாக்கத்துறை கண்காணிக்க வேண்டும். தமிழக அரசு அவருக்கு ஆதரவான நிலையில் இருக்கக்கூடிய சூழலில், அவரும் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ள சூழலில் அவரின் செயல்பாடுகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம் என வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
செந்தில் பாலாஜிக்கு கிடைத்த ஜாமீன்... கோவையில் எப்படி எதிரொலித்து வருகிறது? இதோ தகவல்!
- by David
- Sep 26,2024