கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் நீட்டிக்கப்படுமா? ஆய்வுக்கு தயாராகும் நெடுஞ்சாலை துறை!
- by David
- Feb 16,2025
கோவை மேட்டுப்பாளையம் சாலையில் சாய் பாபா கோவில் வழியே வரக்கூடிய முருகன் மில்ஸ் முதல் எருக்கம்பெனி வரை உயர்மட்ட மேம்பால கட்டப்பட்டு வருகிறது. இந்த மேம்பாலத்தை நீட்டிப்பு செய்ய வாய்ப்புள்ளதா என்பதை பற்றி ஆய்வு செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அண்மையில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஏ.வ.வேலு கோவை மாநகரில் பொதுப்பணித்துறை சார்பில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்ய வந்த போது, அவரிடம் சாய்பாபா காலனி மேம்பாலத்தை நீட்டிப்பு செய்ய பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை வைப்பது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, அது குறித்து நிச்சயம் ஆராயப்படும் என்று கூறினார்.
இந்த மேம்பாலத்தை நீட்டிப்பு செய்ய வேண்டும் என்று அதிமுக தரப்பிலும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியும் இதை வலியுறுத்தினார்.
இந்நிலையில் இந்த மேம்பாலத்தை அவிநாசிலிங்கம் பல்கலைக்கழகம் வரை நீட்டிப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வை நடத்த நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டுள்ளது எனவும், இந்த நீட்டிப்பிற்கென்று பிரத்தியேக விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு அடுத்த நிதியாண்டில் அது நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.