கோவை மாவட்டத்தில் காட்டுயானை - மனித மோதலை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கனிம வன கொள்ளையை தடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சியினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளித்தனர்.
அக்கட்சியின் மாவட்ட செயலாளர் ராஜ் தலைமையில் மனு அளிக்க வந்த அவர்கள் யானையின் படத்துடன் வந்து மனு கொடுத்தனர்.
இது குறித்து பேசிய பாமக கோவை மாவட்ட செயலாளர் ராஜ், கடந்த சில மாதங்களாகவே யானை- மனித மோதல்கள் அதிகமாக இருப்பதாகவும் அதிலும் நாட்டிலேயே கோவை மாவட்டத்தில் தான் யானை மனித மோதல்கள் அதிகமாக இருப்பதாக தெரிவித்தார். கோவை மாவட்டத்தில் 9 யானை வழித்தடங்கள் இருப்பதாக தெரிவித்த அவர் அந்த வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை பாரபட்சம் பாராமல் உடனடியாக அகற்ற வேண்டும் என தெரிவித்தார். மேலும் பாரதியார் பல்கலைக்கழகமே யானைகள் வழித்தடத்தில் இருப்பது வருந்தத்தக்க விஷயம் என கூறினார்.