சிட்டுக்குருவிகள் சிரமப்பட இவையெல்லாமும் தான் காரணம் மக்களே!
- by David
- Mar 20,2025
வெகு சில விலங்குகளும் பறவைகளும் மட்டுமே இயற்கையாக மனிதர்களுடன் நெருங்கி இருக்க விருப்பப்படும். அப்படி பட்ட ஒரு ஜீவன் தான் சிட்டுக்குருவி.
இந்த வகை பறவையின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாக நகரப்பகுதிகளில் குறைந்து வருகிறது என்ற கருத்து உள்ளது. சிலர் செல்போன் கோபுர கதிர்வீச்சுக்களால் இது ஏற்படுவதாக கூறுகின்றனர். ஒரு பிரம்மாண்ட இயக்குனர் இதுபற்றி ஒரு திரைப்படத்தையே உச்ச நட்சத்திரம் ஒருவரை வைத்து தமிழில் எடுத்திருக்கிறார். அந்த அளவுக்கு இதுதான் காரணம் என்று கருத்து பொதுவெளியில் உள்ளது.
இது சரியா தவறா என்ற விவாதம் செய்வதை விட நிச்சயமாக இதுமட்டுமே காரணமாக இருக்காது என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். சரி அப்போது வேறு எதுவெல்லாம் காரணமாக இருக்க முடியும்?
முன்பு இருந்தது போல இன்று வீடுகள் இருப்பதில்லை. எல்லாமே அடுக்குமாடி குடியிருப்புகள் தான். இதில் எங்கு போய் சிட்டுக்குருவிகள் கூடுகட்டி குஞ்சு பொரிக்க போதிய இடம் இருக்கும்? என்கின்றனர் பறவை ஆர்வலர்கள்.
முன்பு வீட்டின் மொட்டை மாடியில் மக்கள் தங்களுக்கு தேவையான கோதுமை மற்றும் சில தானியங்களை வெயிலில் காய வைக்கும் வழக்கத்தை கொண்டிருந்தனர். அதை சிட்டுக்குருவிகள் கொத்தி தின்னும். இப்போது எல்லாமே பிளாஸ்டிக் பாக்கெட்களில் கிடைக்கின்றன.
நகர் பகுதியாக இருந்தாலும் முன்னர் அங்கு வயல்வெளிகள் இருக்கும், குட்டைகள் அருகே இருக்கும் இடங்கள் மாசில்லாத நிலை இருக்கும். இங்கெல்லாம் இருக்கும் சிறு புழு பூச்சிகள் சிட்டுக்குருவிகளுக்கு சிற்றுண்டி போல கிடைத்தன. ஆனால் இன்று நகரங்களில் விளைநிலங்கள் குறைந்து வருகிறது. வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள் தான் அதிகம் காணப்படுகிறது.
அதை மீறி வயல்வெளிகள் இருந்தால், அதில் இரசாயன தெளிப்புகள் செய்யப்படும் நிலையில் புழு பூச்சிகள் அதிகம் இருக்க வாய்ப்பு குறைவே. குளம் குட்டைகளில் மாசு அதிகரித்து வருவதால் அந்த பகுதி அருகே பறவைகள் உணவு தேடி செல்வது குறைகிறது.
இதை விட, முன்பு பறவைகளை பற்றி சிந்திக்க, அதற்கு உணவளிக்க நேரம் ஒதுக்க மக்கள் முயன்றனர். மாடிகளில் தண்ணீர் வைக்கவும், சிறு கிண்ணங்களில் கம்பு, கேழ்வரகு, திணை, சாமை போன்ற சிறுதானியங்கள் வைக்கவும், அவை கூடுகட்ட பானை, வைக்கோல் போன்றவை வைக்கவும் நேரம் இருந்தது. இன்று நகரங்களில் 24 மணி நேரம் போதாது என்ற நிலையே உள்ளது.
எனவே செல்போன் கோபுரம் மட்டும் குறைந்துவிட்டால் சிட்டுக்குருவிகள் அதிகரிக்காது. நமக்கு அக்கறை அதிகரித்தால் தான் இந்த சிட்டுக்குருவி போல மறைமுகமாக நம்மை நாடி இருக்கக்கூடிய சில ஜீவன்கள் நலமாக இருக்கமுடியும்.
சரி இதெல்லாம் ஏன் இன்று சொல்லவேண்டும்?
இன்று (மார்ச் 20) உலக சிட்டுக்குருவிகள் தினமாக கொண்டாடப்படுகிறது. எனவே இன்றைய தினத்தில் சிட்டுக்குருவிகள் மேல் நாம் அனைவரும் அக்கறை செலுத்த ஒரு நல்ல வாய்ப்பு என்பதுவே இதை பகிர காரணம்.
இந்த தினத்தை முன்னிட்டு, நேச்சர் என்விரான்மென்ட் சர்வீஸ் டிரஸ்ட் (NEST) எனும் தனியார் அமைப்பு மற்றும் தமிழ்நாடு வனத் துறை ஆகியவை இணைந்து கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள தமிழ்நாடு மாநில நீதித்துறை அகாடமி மண்டல மையத்திற்கு அருகில் விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.
கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் மற்றும் ஆனைமலை புலிகள் காப்பகத்தின் தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் கள இயக்குனர் டி. வெங்கடேஷ் IFS ஆகியோர் இந்த பேரணியை தொடங்கி வைத்தனர்.
பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கு சிட்டுக் குருவிகள் கூடுகட்ட வழிசெய்யும் சிறு பெட்டிகள் இலவசமாக வழங்கப்பட்டன.
இந்த பேரணியில், ஏராளமான பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.