கோவை வ.உ.சி பார்க் - வ.உ.சி மைதானம் அருகே மத்திய அரசு மற்றும் கோவை மாநகராட்சி சேர்ந்து உணவு வீதி ஒன்றை ரூ. 1 கோடி மதிப்பில் உருவாக்கியுள்ளனர். இது கடந்த மாதம் இறுதியில் திறக்கப்பட்டது.

மொத்தம் 24 கடைகள் (தலா 330 சதுர அடி) கட்டப்பட்டுள்ளன. அனைத்திற்கும் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. கடைகளை குத்தகைக்கு எடுக்க ஏலம் விடப்பட்பட்டது. ஏலத்தில் வெற்றிபெற்றவர்களுக்கு டெண்டர் வழங்கப்பட்டது. இதற்கான தொகையை மாநகராட்சிக்கு செலுத்தியவர்களிடம் கடைகளின் சாவி வழங்கப்பட்டுள்ளது.

சமீபத்திய தகவல்கள் படி 24 கடைகளுக்கும் ஏலம் விடப்பட்டு டெண்டர் வழங்கப்பட்டுள்ளது ஆனால் தொகைகளை செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் கடைகள் திறக்கப்படாமல் உள்ளன. தொகைகள் செலுத்திய பின்னர் அந்தந்த கடைகள் செயல்பாட்டுக்கு வரும் என பார்க்கப்படுகிறது.


தற்போது அங்கு 4 உணவு வீதி கடைகள் செயல்பட்டு வருகின்றன. இவை 4ம் துரித உணவு கடைகளாக உள்ளன. பொங்கல் பண்டிகை காலம் மற்றும் பொருட்காட்சி மைதானத்தில் நடைபெறுவதால் மக்கள் கூட்டம் மாலை நேரங்களில் சிறப்பாக உள்ளது. 

ஆனால் உணவு வீதியில் பிற கடைகள் திறக்கப்படாமல் இருப்பதால் அங்கு கடைகளுக்கு முன்னர் உள்ள நடைபாதையில் பேன்சி பொருட்கள் வியாபாரம், ஜோசியம், குறி சொல்லுதல் என பிற வியாபாரங்களும் ஜோராக நடக்கிறது.

பொதுமக்கள் சிலரிடம் பேசியபோது அவர்கள், இந்த வளாகத்தில் 3 கடைகள் இருந்தாலும் அதில் ஸ்ப்ரிங் போடேட்டோ, மோமோ, பிரைட் ரைஸ், சிக்கன் ரோல், சீஸ் மேகி நூடுல்ஸ், பிரட் ஆம்லெட்,  ஐஸ் கிரீம், மொஜிடோ போன்ற பல வகையில் துரித உணவுகளுடன் ஆரோகியமான இட்லி, தோசை, இடியாப்பம் போன்ற உணவுகளுக்கு கடைகள் சில இருந்தால் அருமையாக இருக்கும் என கருத்து தெரிவிக்கின்றனர்.

இவர்கள் கருத்து சிந்திக்கவேண்டிய ஒன்று தான். இன்றைய தேதியில், வ.உ.சி. பார்க்கை சுற்றி துரித உணவு கடைகள் ஏராளம் உள்ளது. அதை தான் மக்கள் உண்ணவேண்டும் என்றால் கொஞ்சம் நடந்து சென்றாலே போதும்.

வ.உ.சி. பார்க் அருகே பொழுதுபோக்குக்கு வரும் மக்கள் துரித உணவு வகைகளை தவிர பிற உணவுகளை ஆரோக்கியமான முறையில் குறைந்த கட்டணத்தில் சாப்பிடக்கூடிய வாய்ப்பை இந்த உணவு வீதி ஏற்படுத்தி கொடுக்கவேண்டும் என எதிர்பார்ப்பு உள்ளது. முற்றிலுமாக செயல்பாட்டுக்கு இந்த உணவு வீதி வரும் போது சகல வியாபாரிகளுக்கு நல்ல வர்த்தகமும், நுகர்வோருக்கு ஆரோகியமும் கிடைக்கும் இடமாக இந்த உணவு வீதி அமையும் என எதிர்பார்ப்போம். 

Photos : David Karunakaran