கோவையில் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக விமானப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. மும்பையில் இருந்து கோவை வந்த ஏர் இந்தியா விமானம் தரையிறங்க முடியாமல் 25 நிமிடங்களுக்கும் மேலாக வானில் வட்டமடித்துக் கொண்டு இருந்தது.

 

இதேபோல், டெல்லியில் இருந்து கோவை வந்த மற்றொரு விமானம் கொச்சிக்கு திருப்பி விடப்பட்டு உள்ளது.

 

காலை முதலே கோவையில் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. இதனால், விமான ஓடுபாதை தெளிவாக தெரியாததால் விமானங்கள் தரையிறங்க முடியாமல் தவித்து வருகின்றன.

 

மும்பையில் இருந்து வந்த ஏர் இந்தியா விமானம் கோவையில் தரையிறங்க வேண்டிய நிலையில், பனிமூட்டம் காரணமாக நீண்ட நேரமாக வானில் சுற்றிக் கொண்டு இருந்தது. இதனால் விமானத்தில் இருந்த பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.

 

டெல்லியில் இருந்து வந்த விமானமும் இதே காரணத்தால் கொச்சிக்கு திருப்பி விடப்பட்டு உள்ளது. இதனால், கோவைக்கு வர வேண்டிய பயணிகள் அனைவரும் கொச்சியில் இறக்கப்பட்டு, அங்கு இருந்து கோவைக்கு வர ஏற்பாடு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. காலை நேரங்களில் பனிமூட்டம் குறையும் வரை விமானப் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்ப வாய்ப்பில்லை என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.