கோவை VOC பூங்கா எதிரே உள்ள சாலை வழியே 2023 அக்டோபர் மாதத்தில் துவங்கிய உணவு வீதி/ உணவக சாலை திட்டம் 2024 அக்டோபர் ஆகியும் இன்னும் நிறைவு பெறவில்லை.
இந்தியாவில் உள்ள 100 நகரங்களை தேர்ந்தெடுத்து அங்கு உணவு பாதுகாப்பு துறையின் வழிகாட்டுதல்களை கொண்டு உணவு சாலைகள் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு, ஒவ்வொரு உணவு வீதிக்கு தல ரூ.1 கோடி நிதி ஒதுக்கி அதை சம்மந்தப்பட்ட நகரை நிர்வாகிக்கும் மாநகராட்சி முன்னெடுக்கும் படி அறிவுறுத்தியது.
சென்ற ஆண்டு அக்டோபர் மாதத்தில் துவங்கிய இந்த பணிகள் 2024 ஏப்ரல் மாதத்தில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முழுமையாக இந்த திட்டம் இன்னும் நிறைவடையவில்லை.
இப்போது அங்கு 24 கடைகள் கட்டப்பட்டு வண்ணம் பூசப்பட்டுள்ளது. மேற்கூரை பொருத்தப்பட்டுள்ளது. அங்கு இன்னும் கைகழுவும் பேசினுக்கான டாப்புகள் மற்றும் பைப்புகள், மின் இணைப்பு, லைட் அமைப்புகள், குடிநீர் வசதி, குப்பைகளை தனித்தனியே வைக்க குப்பை தொட்டிகள் என பல வேலைகள் மீதம் உள்ளன.
இதுபற்றி அங்கு உள்ள சிலரிடம் பேசுகையில் அவர்கள் கூறியது:-
இங்கு 24 கடைகள் உள்ளது. இதை டெண்டர் முறையில் எடுத்துக்கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இப்போது இங்கு 10-12 கடைகள் ஏலம் போய் உள்ளன. ஆனால் அதில் 1 மட்டும் தான் இப்பகுதியில் ஏற்கனவே கடை வைத்திருந்த கடைக்காரர் ஒருவரால் ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. மற்ற கடைகளை ஏலம் எடுத்துள்ளவர்கள் இங்கு இதற்கு முன்னர் கடை வைத்திருந்தவர்கள் இல்லை.
அதிகாரிகள் கூறும் ஏலத்தொகையை செலுத்தி இங்கு ஏலம் எடுக்க இங்கு சிறு கடைகள் வைத்திருக்கும் பலராலும் முடியாது. ஒருவர் மட்டும் இந்த இடத்தில் அவர் கடைக்கு வழக்கமாக வரும் கூட்டத்தை இலக்க வேண்டாம் என எடுத்துள்ளார். இங்கு வாடிக்கையாளர்கள் வருகின்றனர்,ஆனால் முதலில் இருந்த கூட்டம் இப்போது வருவது இல்லை.
இந்த உணவு வீதி கடைகளில் இன்னும் குடிநீர் இணைப்பு வழங்கவில்லை. ஏலம் எடுத்தவர்கள் இந்த உணவக சாலையில் முழுதுமாக எல்லா வசதிகளும் வந்த பின்னர் தான் கடைகளை திறப்பார்கள்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.