ஈஷாவில் உள்ள தனது மகள்கள் மூளை சலவை செய்யப்பட்டு ஈஷா ஆசிரமத்தில் உள்ளனர் எனவும் தனது மகள்களை மீட்டுத்தர வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் கோவை வடவள்ளி பகுதியை சேர்ந்த காமராஜ் என்பவர் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்திருந்தார். இது குறித்து விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

இதை எதிர்த்து ஈஷா அறக்கட்டளை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வாதிட மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹட்கி ஆஜரானார். ஈஷா மீதான வாய்வழி கூற்றுகள் மீது சென்னை உயர்நீதிமன்றம் இப்படிப்பட்ட விசாரணைகளைத் தொடங்க முடியாது எனவும், இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய ஆணையின் பெயரில் நடைபெறும் விசாரணைக்கு தடை வழங்கவேண்டும் என வாதாடினார்.

சம்மந்தப்பட்ட வழக்கில் அந்த 2 பெண்கள் உயர் நீதிமன்றம் முன்னர் ஆஜராகி உள்ளனர். அப்படி இருக்கையில் இப்படிப்பட்ட ஒரு விசாரணை உத்தரவை உயர் நீதிமன்றம் வழங்க அவசியமில்லை என அவர் வாதாடினார். 

இதையடுத்து நீதிபதிகள் சந்துரு சூட், பரிதிவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட 2 பெண்களிடம் விசாரத்தினர். அப்போது அவர்கள் தாங்களாகவே, சுயவிருப்பதுடனே ஈஷா ஆசிரமத்தில் உள்ளதாக கூறினர்.

8 ஆண்டுகளுக்கு முன்னர் அந்த 2 பெண்களின் தாயாரால் ஆட்கொணர்வு மனு உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என மனுதாரர் (ஈஷா) கூறுகிறார். அப்போதும் அந்த 2 பெண்கள் நீதிமன்றம் முன்பு நிறுத்தப்பட்டனர். எனவே அவர்கள் தாங்களாகவே விரும்பி தான் ஆஷ்ரமத்தில் உள்ளதாக கூறுவதாலும், அவர்களின் வயதை கருத்தில் கொண்டும் மீண்டும் ஆட்கொணர்வு மனுவை அவர்களின் குடும்பத்தினர் சமர்ப்பித்த போது அதன் மேல் இப்படி பட்ட விசாரணையை நடத்த உத்தரவிட்டு இருக்கவேண்டாம் என உச்ச நீதிமன்றம் கூறியது.

இதன்பின்னர் நீதிபதிகள் இந்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை வழக்கு இனி சுப்ரீம் கோர்டில் நடைபெறும் எனவும், அது சம்மந்தமான அறிக்கைகளை இங்கேயே சமர்ப்பிக்க உத்தரவும் வழங்கப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. அந்த இரு பெண்களும் தங்களின் விருப்பத்திலேயே ஈஷா மையத்தில் தங்கியுள்ளதாக போலீசாரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆட்கொணர்வு மனுவின் தேவை பூர்த்தியானது. எனவே இது சம்மந்தமான விசாரணை முடிவுக்குவருவதாக உச்ச நீதிமன்றம் இன்று கூறியது. அதே சமயம் கோவை ஈஷா மையத்துக்கு எதிரான மற்ற வழக்குகளை விசாரிக்க தடையில்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.