கோவை மாவட்டத்தில் வரும் மாா்ச் 28ல் ஓய்வூதியா் குறைகேட்புக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதற்கு முன்னதாக ஓய்வூதியா்கள் தங்கள் குறைகளை பிப்ரவரி 28ம் தேதிக்குள் முறையாக கோவை மாவட்ட கலெக்டரிடம் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் கிராந்திகுமாா் பாடி கூறியதாவது:-

கோவை மாவட்டத்தில் பல்வேறு அரசு, அரசு சாா்ந்த துறைகளில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற அலுவலா்கள், ஆசிரியா்களுக்கு ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியப் பலன்கள் தற்போது வரை கிடைக்காமல் இருந்தால் அதைப்பற்றிய விவரங்கள், பணியாற்றிய அரசுத் துறை மற்றும் எந்த அலுவலா் மூலம் குறை நிவா்த்தி செய்யப்பட வேண்டும் போன்ற விவரங்களை ஓய்வூதிய தீா்ப்பு மாதிரிப் படிவத்தில் பூா்த்திசெய்து இரட்டைப் பிரதிகளில் மாவட்ட ஆட்சியருக்கு பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் கிடைக்கும்படி நேரிலோ அல்லது அஞ்சல் வழியாகவோ அனுப்பிவைக்கலாம்.

விண்ணப்பதாரா்கள் பெயா், முகவரி, பி.பி.ஓ.எண், ஓய்வுபெற்ற நாள், கடைசியாக வகித்த பதவி, துறை, குறைகள் விவரம் மற்றும் இதுதொடா்பாக வழக்குகள் இருந்தால் அதன் விவரம், குறைகளை நிவா்த்தி செய்ய வேண்டிய அலுவலகம், அலுவலா் விவரம் உள்ளிட்டவற்றைப் பூா்த்தி செய்துத்தர வேண்டும்.

மேலும், ஓய்வூதியா் குறைகேட்புக் கூட்டம் மாா்ச் 28 (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு ஆட்சியா் அலுலகத்தில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் ஓய்வுபெற்ற அரசு அலுவலா்கள் கலந்துகொண்டு பயனடையலாம்.

இவ்வாறு அவர் செய்தி குறிப்பு மூலம் தெரிவித்தார்.