2ம் நாளாக இன்று கூடிய தமிழக சட்டமன்றத்தில், முன்னாள் அமைச்சரும், தற்போதைய கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான SP வேலுமணி, கோவை மாநகரில் உள்ள வெள்ளலூர் குப்பைக்கிடங்கால் தற்போது மக்கள் சந்தித்து வரும் ஆபத்து குறித்து பேசினார்.

இதுபற்றி அவர் இன்று பேசுகையில், குப்பை கிடங்கில் இருந்து இதற்கு முன்பு இல்லாத அளவிற்கு 25 கிலோமீட்டருக்கு கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. 1 வார காலமாக அங்குள்ள மக்கள் மிக பெரும் துன்பத்திற்கு ஆளாக வருகின்றனர். இதுகுறித்து கோவை மாவட்ட கலெக்டரிடம் தான் பேசியுள்ளதாக கூறிய அவர், சென்ற காலங்களில் செய்தது போல குப்பை கிடங்கில் மருந்து அடித்து நாற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

போத்தனூர், வெள்ளலூர் , மதுக்கரை, குனியமுத்தூர், குறிச்சி , செட்டிபாளையம், ஆத்துப்பாலம் ஆகிய பகுதிகளில் இதனால் பாதிப்பு எழுகிறது. மக்கள் இதனால பதட்டமாக உள்ளனர். எனவே அரசு அதுபற்றி கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

அதேபோல, பில்லூர் 3ம் கூட்டுகுடிநீர் திட்டம் மற்றும் கோவை மாநகரில் சாலைகள் சீரமைப்பு பற்றியும் அவர் தொடர்ந்து பேசினார். 

பில்லூர் 3ம் கூட்டுகுடிநீர் திட்டத்தின் உபரி நீர் கிராமங்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டது. ஆனால் அதுவும் இன்னும் முழுமையாக பொய் சேராமல் உள்ளது என்பதை சட்டமன்ற உறுப்பினர் SP வேலுமணி சட்டமன்றத்தில் தெரிவித்தார். எனவே விரைவாக கிராமங்களுக்கு இதன் பலன் சேர நடவடிக்கை தேவை என்றார்.

இதற்கடுத்து, குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை திட்டங்களால் கோவை மாநகரில் பலசாலைகள் மோசமாக உள்ளது. இதை விரைந்து சரி செய்யவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இந்த கோரிக்கைகளுக்கு பதிலளித்த நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் KN நேரு கூறியதாவது:-

குப்பை கிடங்கு

குப்பை கிடங்கு பிரச்சனை பற்றி கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரனிடம் பேசுவதாக  கூறிய அமைச்சர் நேரு, குப்பைக்கு மருந்து அடிக்கவேண்டிய கோரிக்கைக்கு, அதற்கான நிலைமை என்னவென்று ஆணையரிடம் கலந்து பேசி செய்கிறோம் என கூறினார்.

பில்லூர் 3 கூட்டு குடிநீர் திட்டம்

கடந்த அதிமுக ஆட்சியில் இந்த பில்லூர் 3ம் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு எந்த இடத்தில் தண்ணீர் எடுக்கவேண்டுமோ அங்கு மட்டும் பணிகள் நடைபெற்றது. ஆனால் திமுக ஆட்சியில், இதற்கான பிற பல முக்கிய பணிகள் முன்னெடுக்கப்பட்டதாக அமைச்சர் நேரு கூறினார். 

பில்லூர் 3 திட்டத்தின் கீழ் முழுமையாக தண்ணீர் எடுக்கும் நேரத்தில் மேட்டுப்பாளையம் மற்றும் திருப்பூர் போன்ற பகுதிகளுக்கு தண்ணீர் வழங்க மேட்டுப்பாளையம் பக்கத்தில் தடுப்பணை கட்டும் பணி நடைபெற்ற வருகிறது.

பில்லூர் 3ம் கூட்டு குடிநீர் திட்டத்தில் மீதமாகும் தண்ணீரை கிராமங்களுக்கும், நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கும் கொண்டு செல்வதற்காக திட்டம் தீட்டப்பட்டுள்ளது. எனவே திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு அதற்கான நிதி ஒதுக்கப்பட்டு அந்த தண்ணீர் கொண்டு செல்லும் பணி நிறைவேற்றப்படும் என அவர் உறுதி அளித்தார்.

சாலைகள்

கோவையின் பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி கேட்டுக்கொண்டதற்கு அடுத்து கோவை மாநகரில் சாலைகளை மேம்படுத்த மொத்தம் ரூ.300 கோடி சிறப்பு நிதியை முதலமைச்சர் வழங்கியுள்ளார். எனவே சாலைகள் விரைவில் சீரமைக்கப்படும் என்றார். மாநகரின் பல்வேறு இடங்களில் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் முடிவடைய தாமதம் ஆகி வருகிறது. இந்த திட்டம் முடிந்தவுடன் சாலைகள் அமைப்பது வேகமாக நடத்தப்படும் என அமைச்சர் கூறினார்.