ரெட் ஒயின் குடிப்பதால் நன்மைகள் உள்ளது என கேள்விப்பட்டிருப்போம், ஆனால் அதை சோப்பாக பயன்படுத்துப்படைவதை பற்றியும், அதனால் கிடைக்கும் நன்மைகளை பற்றியும் கேள்விப்பட்டிருப்போமா? 

முறையாக தயாரிக்கப்படும் ரெட் ஒயின் சோப்பில் ரெஸ்வெராட்ரோல் எனும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இருக்கும். அது சருமத்தை இளமையாக வைத்துக்கொள்ளவும், சருமத்தில் உள்ள சுருக்கங்களை குறைக்கவும் இது உதவும். இது போன்ற பல தயாரிப்புகள் கோவை மாநகரில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது. 

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்திடவும், கல்லூரி மாணவ - மாணவிகளிடம் கொண்டு சேர்க்கும் வகையிலும் கோவை - இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 06-12-2024 மற்றும் 07-12-2024 தேதிகளில் கல்லூரி சந்தை கண்காட்சி 2 நாட்கள் நடைபெறுகிறது.

கல்லூரி மைதானத்தின் ஒரு பகுதியில் நடைபெறும் இந்த சந்தையில் சுய உதவிக்குழுக்களால் தயாரிக்கப்பட்ட கைவினை பொருட்கள், பேன்சி பொருட்கள், மசாலா வகைகள், ஹெர்பல் சோப்பு போன்ற பொருட்கள் இடம்பெற்றுள்ளன.

கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் இருந்து இளம் வயதிலேயே தொழில்முனைவோர் ஆக வேண்டும் என்ற எண்ணத்துடன் இதுபோன்ற சிறுதொழில் செய்யும் நபர்கள் முதல் சுமார் 30 ஆண்டுகளாக ஹெர்பல் தயாரிப்புகளை செய்து வரும் அனுபவம் கொண்ட நபர்கள் இந்த 2 நாள் நிகழ்வில் பங்கேற்றுள்ளனர்.

இந்த நிகழ்வில் பங்கேற்ற C.L. ரேணுகா எனும் தொழில்முனைவோர் கூறுகையில்:-

கோவையில் 30 ஆண்டுகளாக ஹெர்பல் தயாரிப்புகளான சிவப்பு சந்தன சோப்பு, குப்பைமேனி சோப்பு, ரெட் ஒயின் சோப்பு, ரோஜா இதழ் உடன் தேன் கலந்த சோப்பு, மூலிகை காஜல், பீட்ரூட் லிப் பாம் என பலவற்றை தயாரித்து விற்பனை செய்து வருகிறேன். 

வழக்கமாக என்னுடைய இரண்டு சக்கர வாகனத்தில் பொருட்களை ஏற்றிக்கொண்டு பல இடங்களுக்குச் சென்று விற்பனை செய்து வருவேன். அரசு சார்பில் இதுபோன்று சந்தைகள் நடைபெறும் போது அதில் பங்கேற்பதன் மூலம் அலைச்சல் குறைந்து புதுப்புது வாடிக்கையாளர்களை இந்த சந்தையில் பெற முடிகிறது. 

மற்ற சில பங்கேற்பாளர்கள் உடன் பேசியபோது அவர்கள் கூறியது:-

இது போன்ற கல்லூரி சந்தைகள் அவ்வப்போது நடைபெறும். இவற்றில் பங்கேற்கும் போது வியாபாரம் ஒரு பக்கம் நடைபெற்றாலும் புது வாடிக்கையாளர்களின் அறிமுகம் கிடைப்பது தான் சிறப்பான ஒன்று.

இங்கு வந்து எங்களுடைய பொருட்களை பார்த்துவிட்டு உடனே வாங்கி செல்லும் சிலர் இருக்கிறார்கள், எங்கள் விவரங்களை சேகரித்து விட்டு சில நாட்கள் கழித்து பொருட்களை ஆர்டர் செய்பவர்களும் உள்ளனர். இது போன்ற நிகழ்ச்சிகள் எங்களுக்கு ஊக்கம் அளிப்பதாக உள்ளது, என்றனர்.

இந்த நிகழ்வில் பங்கேற்ற பலரும் இன்ஸ்டாகிராம் தளத்தை பயன்படுத்தி தங்களுடைய தயாரிப்புகளை விளம்பரப்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.