கோவை மாவட்டத்தில் உள்ள நீலம்பூர் - மதுக்கரை இடையே 2 வழிச்சாலை அமைக்க நெடுஞ்சாலை துறையுடன் எல் & டி எனும் தனியார் நிறுவனம் ஒப்பந்தம் செய்து 1998ல் அதை கட்டியது. எல் & டி பைபாஸ் சாலை என்று அறியப்படும் இந்த புறவழிச்சாலையை சுங்க சாவடி அமைத்து 32 ஆண்டுகள் பராமரிக்க ஒப்பந்தம் அரசுக்கும் அந்த நிறுவனத்துக்கும் இடையே கையெழுத்தானது.

இந்த பாதை மூலம் கோவையிலிருந்து கேரளாவுக்கு வேகமாக செல்ல முடியும். மேலும் சென்னை பெங்களூரு போன்ற  நகரங்களுக்கு கேரளாவில் இருந்து செல்லும் வாகனங்கள் இந்த பைபாஸை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இதில் நாளுக்கு நாள் 2 சக்கர வாகனங்கள் முதல் பெரும் சரக்கு லாரிகள் வரை பயணிப்பது அதிகரித்து வருகிறது. 

இதனால் அடிக்கடி இங்கு போக்குவரத்து நெரிசலும் ஏற்படும். குறிப்பாக சிந்தாமணிப்புதூர் சிக்னல் பகுதியில் வாகனங்கள் வரிசைகட்டி நிற்கும்.  இங்கு ஏற்படும் போக்குவரத்து நெரிசலையும் அடிக்கடி ஏற்படக்கூடிய சாலை விபத்துகளையும் குறைக்க வேண்டும் என்பதற்காக இந்த சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது.

2031 வரை இந்த சாலையை எல் & டி நிறுவனம் பராமரிக்க உரிமை பெற்று உள்ளது. இந்நிலையில் எல் & டி நிறுவனத்துடன் உள்ள ஒப்பந்தம் முடிய 5 ஆண்டுகளுக்கு முன்னரே, உரிய இழப்பீடு வழங்கி அந்த சாலையை அகலப்படுத்தி விரிவாக்கம் செய்யும் பணிகளை கையில் எடுக்க தமிழக அரசின் மாநில நெடுஞ்சாலை துறையின் தேசிய நெடுஞ்சாலை பிரிவு எல் & டி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியது.இந்நிலையில் 

இந்நிலையில் இது தொடர்பான பேச்சுவார்த்தையில் முடிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் விரைவில் மதுக்கரை - நீலாம்பூர் பைபாஸ் பணிகளும் தவங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

சுமார் ரூ.500 கோடி மதிப்பில் இந்த இரண்டு வழி சாலையை நான்கு வழி சாலையாக மாற்றி இருபுறமும் சர்வீஸ் ரோடு அமைக்க விரிவான திட்ட அறிக்கையும் நெடுஞ்சாலைத்துறை தயாரித்து இருக்கிறது. ஏற்கனவே சாலையின் இரண்டு புறமும் 45 மீட்டர் அளவிற்கு நிலத்தை அரசு கையகப்படுத்தி உள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே இந்த திட்டப் பணி விரைவாக துவங்க வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது.