கோவை, தொண்டாமுத்தூர் அருகே ஓணப்பாளையம் பகுதியில் வெண்ணிலா எனும் விவசாயிக்கு சொந்தமான இடத்தில் கட்டிவைக்கபட்ட ஆடுகளை மார்ச் 1ம் தேதி சிறுத்தைப்புலி ஒன்று வேட்டையாடியதன் கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளிவந்து அப்பகுதியில் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. சிறுத்தைப்புலியை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். 

இதற்கு நடுவே எந்த இடத்தில் ஆடுகளை வேட்டையாடி ருசித்ததோ அதே இடத்திற்கு அந்த சிறுத்தைப்புலி மீண்டும் வந்து ஆடுகள் உள்ளதா என்று தேடியது. இந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளும் வெளியானது.

இந்நிலையில், நேற்று இரவு பூச்சியூர் அருகே உள்ள கலிங்க நாயக்கன்பாளையம் பகுதியில் விவசாய நிலத்தில் சிறுத்தை பதுங்கி இருப்பதாக வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

உடனடியாக 12 பேர் கொண்ட வனத்துறை குழுவினர் அங்கு சென்று பதுங்கி இருந்த சிறுத்தையை வலை விரித்து பிடித்து உள்ளனர். அனுமதிக்கிடைத்த பின்னர் அதனை அடர்ந்த வனப் பகுதிக்கு கொண்டு சென்று விட வனத் துறையினர் திட்டமிட்டு உள்ளனர்.

இதையும் படிங்க : கோவையில் பிடிபட்ட சிறுத்தைப்புலி உயிரிழந்தது!