கோயம்புத்தூர் மாநகராட்சி, வடக்கு மண்டலம், வார்டு எண் -25 காந்திமாநகர் பகுதியில் 2.25 ஏக்கர் அளவில் அமைந்துள்ள விளையாட்டு மைதானம் பல காலமாக பராமரிப்பு இல்லாமல் குப்பை, காய்கறி கழிவுகள் கொட்டும் இடமாக இருந்து வந்தது.

இதை மேம்படுத்தவேண்டும் என்ற கோரிக்கை அப்பகுதி மக்களிடம் பல காலமாக இருந்து வருகிறது. மைதானத்திற்கு எதிரே மாநகராட்சியின் பூங்கா இருந்தாலும், இதை மேம்படுத்தினால் அது சிறுவர்கள், விளையாட்டு ஆர்வலர்கள் ஓடி ஆடி விளையாட இந்த மைதானம் சிறந்த இடமாக இருக்கும்.

இங்கு முதலில் வியாழக்கிழமைகளில் வாரசந்தைகள் நடைபெற்று வந்தது. இதன் காரணமாக காய்கறி கழிவுகள் அங்கு ஆங்காங்கு கொட்டப்பட்டு இருந்தது. இதற்கு பின்னர், மைதானம் என்பது விளையாட்டு பயன்பாட்டுக்காகவே என முடிவு செய்யப்பட்டு அங்கு சந்தை நடைபெற அனுமதி மறுக்கப்பட்டது.

இந்த பகுதியில் உள்ள மைதானம் குப்பை கொட்டவோ, சந்தை போடவோ, அல்லது ஆடு மாடு மேய்க்கப்படவோ பயன்படுத்தப்படாமல், அது இளைஞர்கள் தங்கள் நேரத்தை விளையாட்டில் செலுத்த உகந்த இடமாக இருக்கவேண்டும் என்பதற்காக சென்ற செப்டம்பர் மாதத்தில் கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் இங்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, மேம்படுத்துவது தொடர்பாக அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

இந்நிலையில் விரைவில் இந்த மைதானத்தை, விளையாட்டு சங்கங்களுடன் இனைந்து கோவை மாநகராட்சி மேம்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த மைதானத்தில் நிலம் சமம் செய்யப்படும், உயர் கம்ப மின் விளக்குகள் பொருத்தப்படும், விளையாடுபவர்கள் அமர்வு இடம், வீரர்கள் ஓய்வறை, உடைமாற்றும் அறை, கழிப்பிடம், குடிநீர் வசதி உள்ளிட்ட வசதிகள் கொண்டுவரப்படவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.