தமிழ்நாடு முதலமைச்சர் 78-வது சுதந்திர தினத்தன்று (15.08.2024) ஆற்றிய சுதந்திர தின உரையின் போது முன்னாள் படைவீரர் நலனுக்காக 'முதல்வரின் காக்கும் கரங்கள்' என்ற புதிய திட்டத்தின் கீழ் முன்னாள் படைவீரர்கள் தொழில் தொடங்க ரூ.1 கோடி வரை வங்கிகள் மூலம் கடன் பெறுவதற்கு வழிவகை செய்யப்படும் என அறிவித்தார்.
இத்திட்டத்தின் மூலம் தொடங்கப்படும் தொழில்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையில் 30 % மூலதன மானியமும், 3 % வட்டி மானியமும் வழங்கப்படும் எனவும், இவர்களுக்குத் திறன் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சிபோன்ற தேவையான பயிற்சிகளும் அரசால் வழங்கப்படும் எனவும் இராணுவப் பணியின்போது உயிரிழந்த படைவீரர்களின் கைம்பெண்களும் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
எனவே, சுயதொழில் செய்ய விரும்பும் முன்னாள் படைவீரர்கள் / படைப்பணியின் போது மரணமடைந்த படைவீரர்களின் கைம்பெண்கள் ஆகியோர் முன்னாள் படைவீரர் எண், தரம், பெயர், முகவரி, கைபேசிஎண், வயது. செய்யவிரும்பும் சுயதொழில் குறித்த விவரம், அதன் முன் அனுபவம் மற்றும் கடன் பெற உத்தேசித்துள்ள தொகை ஆகிய விவரங்களுடன் கோயம்புத்தூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நலஅலுவலகத்தில் 10.10.2024-க்குள் விண்ணப்பிக்கலாம்.
கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள் / படைப்பணியின் போது மரணமடைந்த படைவீரர்களின் கைம்பெண்கள் இவ்வரிய வாய்ப்பினை பயன்படுத்தி பயனடையுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்கள்.
கோவை மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் சுயதொழில் துவங்க ரூ.1 கோடி வரை வங்கிகள் மூலம் கடன் பெறமுடியும்!
- by CC Web Desk
- Oct 09,2024