அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தன்னை அவதூறாக பேசியதாக கூறி அந்த கட்சியில் இருந்து நீக்கப்பட்ட கே.சி.பழனிச்சாமி, எடப்பாடி மீது சென்ற ஆண்டு முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்திருந்தார்.

இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது. இது தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி வரும் 15.4.2025ல் கோவை முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றம் முன்பு ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 

அதிமுகவில் உறுப்பினராகவும், அதன் செய்தி தொடர்பாளராகவும் 2018 வரை பொறுப்பு வகித்து வந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி, 2018ல் கட்சியின் கொள்கைகளுக்கும், குறிக்கோளுக்கும் முரண்பாடான வகையில் செயல்பட்டதால் நீக்கப்படுவதாக அப்போதைய அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ், இ.பி.எஸ். ஆகியோர் உத்தரவின் பேரில் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

அதிமுக-வை ஒருங்கிணைக்க போவதாக அறிவித்து ஒரு ஒருங்கிணைப்பு குழுவை இவர், முன்னாள் எம்.எல்.ஏ. ஜே.சி.டி.பிரபாகர், ஓ.பி.எஸ். அணியின் முன்னாள் கொள்கை பரப்புச்செயலாளர் வா.புகழேந்தி உடன் இனைந்து துவங்கினார்.

இந்நிலையில், 2024 பாராளுமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியடைந்ததை பற்றி கே.சி.பழனிசாமி பேட்டியளித்தார். இதை பற்றி 2024 ஜூன் அன்று கோவை விமான நிலையம் வந்த அக்கட்சியின் பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியிடம் செய்தியாளர்கள் கேட்ட போது, கே.சி.பழனிச்சாமி அதிமுக உறுப்பினரே கிடையாது எனவும், ரோட்டில் போவோர் வருவோர் எல்லாம் ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஆகிவிட முடியாது என்று அவர் கருத்து தெரிவித்திருந்தார்.

தன்னை பற்றி எடப்பாடி அவதூறாக பேசிவிட்டார் என அவர் அப்போது வழக்கு தொடர்ந்தார். இதனால் இப்போது எடப்பாடி பழனிச்சாமி கோவை நீதிமன்றம் முன்பு ஆஜராகும் சூழல் உருவாகியிருக்கிறது.