காட்டெருமை தாக்கியதால் வனக்காவலர் கோவையில் உயிரிழப்பு
- by CC Web Desk
- Mar 12,2025
கோவை மாவட்டம் தடாகம் வனப்பகுதிக்கு உட்பட்ட தோலம்பாளையம் பகுதியில் உள்ள விவசாய பகுதியில் புகுந்த காட்டெருமை ஒன்றை விரட்டும் பணியில் கடந்த மார்ச் 10ம் தேதி வனத்துறை அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர்.
இந்த பணியில் ஈடுபட்ட அசோக் குமார் (52) எனும் வனக்காவலரை காட்டெருமை தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார்.அவரை உடனே சீலியூர் அரசு மருத்துவமனையில் முதலுதவிக்காக அனுமதித்து அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அங்கு 2 நாட்களாக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இன்று காலை 8.30 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உயிரிழந்த அசோக் குமாருக்கு மனைவி மற்றும் ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். அவரின் உடல் உடல்கூறாய்வு முடிந்ததும் அவருடைய சொந்த ஊரான கன்னியாகுமரிக்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.