கோவை வ.உ.சி பூங்கா அருகே உணவு வீதி திட்டம் மூலம் தரமான, சுவையான உணவுகளை ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்காத வகையில் ஒரு சுத்தமான சாலையோர பகுதியில் வழங்க மத்திய அரசு திட்டமிட்டு ரூ.1 கோடி நிதியை ஒதுக்கி பணிகளை நடத்த அறிவுறுத்தியது.

தமிழகத்தில் முதல் கட்டமாக கோவையுடன், சென்னையில் உள்ள எலியட் பீச் பகுதி, வேளாங்கண்ணி சாலையோர உணவு தெரு பகுதி, மற்றும் மாமல்லபுரத்தில் உள்ள கோவில் வீதி ஆகிய இடங்களிலும் தலா ரூ.1 கோடியில் இந்த உணவு வீதி திட்டத்தை முன்னெடுக்க மொத்தம் ரூ. 4 கோடியை மத்திய அரசு சென்ற ஆண்டு ஒதுக்கியது.

இந்த வீதிகளில் ஒரே மாதிரியான கடைகள் கட்டப்படும். அத்துடன் நடைபாதை,  தெரு விளக்கு, வாடிக்கையாளர்கள் கடை அருகே உட்கார்ந்து உணவு சாப்பிட இடம், கழிப்பிட வசதி,  திடக்கழிவு சேகரிப்பு தொட்டி என நிறைய வசதிகள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டது.

கோவையில் இந்த பணியை மாநகராட்சி முன்னெடுத்து வருகிறது. இதற்கான கட்டுமான பணிகள் அக்டோபர் 2023  வந்தது துவங்கியது. கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட கடைகள் தலா 330 சதுர அடியில் வ.உ.சி பூங்கா எதிரே, மைதானத்துக்கு அருகே ஒரு நேர் பகுதியில் கட்டப்பட்டுள்ளது.

இந்த கடைகள் ஏலம் அடிப்படையில் வியாபாரிகளுக்கு வழங்கப்படும். இதற்கு முன்பு இந்த பகுதியில் கடைகள் நடத்தியவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

கடைகள் கட்டிமுடிக்கப்பட்டு, மேற்கூரைகள் அமைக்கப்பட்டு, வண்ணமும் பூசி முடிக்கப்பட்டு விட்டது. ஏப்ரல் மாதத்திலேயே சுமார் 80% பணிகள் நிறைவடைந்து விட்டது. மீதம் குடிநீர் இணைப்பு, மின் இணைப்பு, தெரு விளக்கு வசதி, கழிப்பிட வசதி போன்றவை அமைக்கப்பட வேண்டி உள்ளது.

மார்ச் மாதத்தில் முடியும் என எதிர்பார்த்த இந்த திட்டப்பணிகள், மே, ஜூன் என சென்று கொண்டே இருந்தது. இப்போது ஜூலை ஆகியும் இந்த உணவு வீதி பணிகள் முடியாமல் உள்ளது.

கட்டிடங்கள் கட்டப்பட்டாலும் பிற பணிகள் மீதம் இருப்பதால் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் அந்த பகுதியில் குப்பைகள் சேர ஆரம்பித்துள்ளது. இலைகள் மற்றும் பிற குப்பைகள் கொத்து கொத்தாக அங்கு பரவி உள்ளது.

இங்கு மாநகராட்சி கவனம் செலுத்தி, துப்புரவு பணிகளை மேற்கொள்வதோடு விரைவில் மீதம் உள்ள பணிகளை முடித்து உணவு வீதி மூலம் சுத்தமான உணவை எளிய மக்களும் தரமான வகையில் அனுபவிக்க வழிசெய்யவேண்டும்.

ஆரோக்கியமான உணவுப்பழக்க வழக்கங்களை மக்களிடம் ஊக்குவிப்பது என்பதும் இந்த திட்டத்தின் முக்கிய குறிக்கோள்களில் ஒன்றாக உள்ளது என்பதால், இங்கு நியாயமான விலையில் மக்களுக்கு நல்ல உணவு கிடைத்தால் தான் அதிக மக்கள் இப்படிப் பட்ட சூழலுக்கு பழக முடியும்.