கோடை 2025 : மக்களுக்கு தரமான பழங்களை மட்டும் விற்பனை செய்யுங்க! கோவை கடைகளில் மிக விரைவில் நடக்கப்போகுது சோதனை
- by David
- Feb 21,2025
கோடை காலம் வந்தாலே பழங்கள், ஜூஸ், குளிர்பானங்கள், மோர், பதனி, நன்னாரி சர்பத் மற்றும் முக்கியமாக இளநீர் போன்ற உடலை குளிர்ச்சியாக வைக்கக்கூடிய உணவுகளை, பானங்களை மக்கள் அதிக அளவில் வாங்கி உண்ணுவது வழக்கம்.
கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில், சாலை ஓரங்களில் இப்போதே இளநீர், தர்பூசணி, வெள்ளரிப்பிஞ்சு, பதநீர் ஜூஸ் விற்பனை ஜோராக ஆரம்பித்துள்ளது.
இனி அடுத்து இரண்டு மாதத்திற்கு கோடை வெயில் இருக்கும் வரை இந்த பொருட்களின் தேவைகள் இருக்கும். ஒரு கிலோ தர்பூசணி ரூ. 20-25 வரை, சாத்துக்குடி ரூ. 45 முதலும், வெள்ளரிப்பிஞ்சு ஒரு கிலோ ரூ.110-120 என விற்பனையாவதாக தெரிய வருகிறது. பல்வேறு இடங்களில் பழச்சாறுகளும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில், கோடைக்கு காலத்தில் வியாபார நோக்கத்தோடு மட்டுமே செயல்படும் சில கடைகளால் வாடிக்கையாளர்களுக்கு தரமில்லாத பொருட்கள் சென்றுவிடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு வரக்கூடிய நாட்களில் உணவு பாதுகாப்புத் துறையினர் கோவை மாநகரங்களில் விற்கப்படும் பழங்கள், பழச்சாறுகள் உடன் உள்ளூரிலேயே தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் குளிர்பானங்கள் மீது தங்கள் கவனத்தை திருப்பி உள்ளனர்.
பழங்களிலும் பல சாறுகளிலும் அதிக நிறங்கள் சேர்க்கப்படுகிறதா, பழங்களைப் பழுக்க வைக்க ரசாயனம் சேர்க்கப்பட்டதா, ஐஸ் போட்டு கொடுக்கப்படும் பழச்சாறுகளில் பயன்படுத்தப்படும் ஐஸ்கட்டிகள் தரமானதாக இருக்கிறதா, உள்ளூரிலேயே தயாரிக்கப்படும் குளிர்பானங்களுக்கு உணவு பாதுகாப்பு துறையின் அங்கீகாரம் இருக்கிறதா என திடீர் சோதனைகள் நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்த சோதனைகள் ஒரு முறை மட்டுமல்ல இந்த கோடைகாலத்தில் அவ்வப்போது நடைபெறும் என தகவல்கள் கூறுகின்றன.