பேக்கரி, டீக்கடை மற்றும் மளிகை கடை ஆகியவற்றில் விற்பனை செய்யப்படும் குளிர்பானங்கள் பெரும்பாலும் பொதுமக்கள் நம்பிக்கையை பெற்ற குளிர்பானங்களாக இருந்தாலும் சில நேரம் இந்த கடைகளில் பெயர் தெரியாத சிறு நிறுவனங்களின் தயாரிப்புகள் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்த குளிர்பானங்கள் தரமான சூழலில், தரமான பொருட்களை கொண்டு தயாரிக்கப்படுகிறதா,அனுமதிக்கப்பட்ட அளவு தான் நிறமிகள் சேர்க்கப்படுகிறதா என உணவு பாதுகாப்பு துறை தரப்பில் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்படுகிறது.
அண்மையில், கோவை போத்தனூர் பகுதியை சேர்ந்த சன்சார், நிஷா தம்பதி அப்பகுதியில் உள்ள உணவகத்தில் பீட்சா ஆர்டர் செய்து காத்திருந்தனர். அவர்கள் அருகே இருந்த ஒரு டீக்கடைக்கு சென்று அங்கு "மா' என்ற பெயருடைய ஒரு குளிர்பானத்தை வாங்கினர்.
குளிர்பானத்தை திறந்து சன்சார் குடிக்கும் பொழுது அது கெட்டுப் போனது தெரிய வந்தது. இது குறித்து கடையில் பணியில் இருந்த நபரிடம் கேட்டு போது அது கெட்டுப் போகவில்லை எனவும், இந்த குளிர்பானம் புதிதாக வந்ததுதான் என்று கூறி அதன் காலாவதி ஆகும் காலம் இன்னும் 6 மாதம் இருக்கிறது என்றும் கூறினார். ஆனால் சன்சார் அதை அருகில் இருப்பவரிடம் குடித்துப் பார்க்க சொன்ன போது, அந்த பொருள் கெட்டு போனது போல இருப்பதாகவே உள்ளது என அவர் கூறியுள்ளார்.
இதுவே இந்த குளிர்பானத்தை சிறுவர்கள் வாங்கி குடித்திருந்தால் அவர்கள் நிலை என்ன ஆகும் என்ற கேள்வியை சன்சார் எழுப்பியுள்ளார். சமூக வலைத்தளத்தில் அவர் இதை பதிவும் செய்துள்ளார். உணவு பாதுகாப்பு துறை இது குறித்து விசாரணை செய்யவேண்டும் என கோரிக்கைகள் இதனால் எழுந்துள்ளது.
கடைகளில் விற்கப்படும் குளிர்பானங்கள் தரம் குறித்து உணவு பாதுகாப்பு துறை கவனம் செலுத்த வேண்டும் - மக்கள் கோரிக்கை
- by David
- Sep 09,2024