கோயம்புத்தூர் மாநகராட்சி, தெற்கு மண்டலம் வெள்ளலூர் குப்பை கிடங்கில் இன்று மதியம் 3:10 மணி அளவில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது.  

இதனால் கரும்புகை வெளியேறி சுற்றுப்புற பகுதிகளில் பரவியது. சம்பவ இடத்தில் மாநகராட்சி தீயணைக்கும் பணிகள் மாநகராட்சியால் முழுமையாக மேற்கொள்ளப்பட்டு தற்போது தீ முழுமையாக கட்டுடுத்தப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

இது குறித்து கோவை மாநகராட்சி கூறியுள்ளதாவது :-

வெள்ளலூர் குப்பை கிடங்கு பகுதியில் வளாகத்தில் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் இன்று (20.04.2025) மாலை சுமார் 4.00 மணியளவில், எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தீயை அணைக்கும் பணிகள் மாநகராட்சியின் சார்பில் மேற்கொள்ளப்பட்டது.

தீயை அணைக்கும் பணியில் சுமார் 5 தீயணைப்பு வாகனங்கள், 4க்கும் மேற்பட்ட ஜே.சி.பி இயந்திரங்கள், 4க்கும் மேற்பட்ட ஹிட்டாச்சி வாகனங்கள், 30 க்கும் மேற்பட்ட தண்ணீர் லாரிகள் மற்றும் 300க்கும் மேற்பட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஈடுபட்டு தீயை முழுமையாக கட்டுப்படுத்தினார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த தீ தடுப்பு பணியில் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் களத்திற்கு ஊழியர்களுடன் சென்று அங்கு தீயணைப்பு பணிகளை ஒருங்கிணைத்தார். மேயர் ரங்கநாயகி, துணை ஆணையாளர்கள் சுல்தானா, குமரேசன், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்றனர். 


தீயால் வெளியான புகை மூலம் குப்பைக்கிடங்கின் சுற்றுவட்டார பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.