கோவை சத்தி புறவழி சாலை திட்டத்திற்கு விவசாய நிலங்கள் மேல் கை வைக்காதிங்க ! திட்டத்திற்கு விவசாயிகள் ஆட்சேபனை
- by David
- Mar 11,2025
கோவை சத்தியமங்கலம் புறவழி சாலை திட்டத்திற்கான பணிகளை துவங்க அரசு ஆரம்பகட்ட பணிகளை ஆரம்பித்துள்ளது. இந்த திட்டத்திற்கான நிலங்களை கையகப்படுத்த அரசு இதழில் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.
92 கிலோமீட்டர் தொலைவுக்கு வரக்கூடிய இந்த புறவழி சாலை, 4 வழி பசுமை சாலையாக அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது கோவை மாவட்டம் கோவில்பாளையம் அருகே உள்ள குரும்பபாளையம் கிராமத்தில் துவங்கி அன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையை கடந்து, புளியம்பட்டி வழியாக சத்தியமங்கலத்தை அடையும். சத்தியமங்கலத்திலிருந்து தமிழக-கர்நாடக எல்லை பகுதி அருகே உள்ள ஹாசனூரில் முடிவடையும்.
இந்த திட்டத்திற்கு விவசாய நிலங்கள் பெருமளவு கையகப்படுத்த வேண்டியுள்ள நிலையில் விவசாய நிலங்களை கையகப்படுத்தி இந்த திட்டத்தை நடத்த அன்னூர், கோவில்பாளையம் வட்டாரங்களை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஆட்சேபனை தெரிவித்து இன்று நிலம் எடுத்தால் பணிக்கான கோவை சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலரை சந்தித்து ஆட்சேபனை கடிதம் வழங்கினர்.
நிலம் கையகப்படுத்தலுக்கான சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலரை பெரும்திரளாக விவசாயிகள் சந்தித்ததினர். அவரிடம், இந்த திட்டத்திற்கு விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டால், இதனால் விவசாயமும், வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் என கூறி, இத்திட்டத்தை கைவிட வலியுறுத்தி சுமார் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் தனித்தனியாக கோரிக்கை மனு அளித்தனர். விவசாயிகள், வருவாய் அலுவலரிடம் திட்டத்திற்கு ஆட்சேபனை தெரிவிப்பது தொடர்பாக கேள்விகள் எழுப்பிய நிலையில், இந்த திட்டம் ஆரம்ப நிலையில் தான் உள்ளது. இதன் மேல் ஆட்சேபனை இருந்தால் அதை எப்போது வேண்டுமானாலும் தரலாம் என கூறினார்.
விவசாயிகள் கூறுகையில், இந்த திட்டம் தொடர்பாக 15 ஆவணங்களை அரசிடம் கேட்டுள்ளோம். அதை அவர்கள் கொடுத்ததிலிருந்து 21 நாட்களில் ஆட்சேபனை எங்கள் தரப்பில் இருந்து தெரிவிக்கப்படும் என அதிகாரிகளிடம் கூறியுள்ளதாக தெரிவித்தனர்.