கோவையில் மலை அடிவார கிராமங்கள் அருகே உள்ள விவசாய நிலங்களில் நடைபெறும் விவசாயம் வனத்திலிருந்து வெளியேறும் விலங்குகள் பாதிப்படைந்து வருவதாகவும், இதுபோன்று யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளால் விவசாயமும், மனித உயிர்களும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகிறது எனவும் இதை தடுக்க வனத்துறை தவறிவிட்டது என கூறியும், தமிழக விவசாயிகள் சங்கத்தினர் இன்று அமைதி வழியில் போராட்டம் நடத்தினர்.

வனத்தை விட்டு வெளியே வரும் விலங்குகளால் சிறுமுகை, காரமடை, பெரியநாயக்கன்பாளையம் போன்ற பகுதிகளில் பயிர்கள் சேதமாகியுள்ளதாக தகவல் உள்ளது.

இதை வனத்துறையினர் தடுக்க தவறிவிட்டனர் எனக்கூறி, கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள வனச்சரக அலுவகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்து, இன்று தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் வேணுகோபால் தலைமையில் கோவை விவசாயிகள் ஒன்றினைந்து ஊர்வலமாக வந்து வனச்சரக அலுவலகத்தில் நுழைய முயன்றனர். 

அவர்களை பெரியநாயக்கன்பாளையம் போலீசார் தடுத்து நிறுத்தி, காத்திருப்பு போராட்டத்திற்கு பதிலாக அலுவலகத்தில் அமர்ந்து பேசுமாறு கேட்டுக்கொண்டனர். இதனால் சற்று நேரம் அங்கு பரபரப்பான சூழல் இருந்தது.

இது பற்றி செய்தியாளர்களிடம் விவசாயிகள் கூறுகையில்:-

இதுவரை யானைகளை வனத்திற்கு வெளியே வராமல் வனத்துறையினர் தடுக்க தவறியதால் ஏராளமான மனித உயிர்களும், பெரிய அளவில் விவசாயமும் அழிந்துவிட்டது. இனி இருக்கின்ற உயிர்களையும் விவசாயத்தையும் காப்பாற்ற வேண்டும் என்று இன்று காத்திருப்பு போராட்டம் நடத்த இருந்தோம்.

பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு இல்லாமல் அறவழியில் அமைதியாக நடத்தவிருந்த இந்த போராட்டத்தை தடுக்கிறார்கள். யானை வெளியேறுவதை தடுக்கச் சொல்லிப் போராடினால் போராட்டத்தை தான் தடுக்கிறார்கள், என அவர்கள் கூறினர்.

மேலும் இதை தமிழக விவசாய சங்கம் வன்மையாக கண்டிப்பதாக கூறிய அவர்கள், இனி தமிழக அளவில் வனவிலங்குகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் பொது மக்களையும் ஒன்று திரட்டி மாநில அளவிலே விரைவில் போராட்டத்தை துவங்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார். 

விவசாயிகளிடம்  பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினர் பின்னர் பேசுகையில், யானைகளை கட்டுப்படுத்த கூடுதல் ஆட்களை நியமிப்பது ரோந்து பணிகளை தீவிர படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்பது உள்ளிட்ட சில உறுதிகளை வழங்கியதனால் அதையடுத்து விவசாயிகள் அங்கிருந்து திரும்ப சென்றனர்.