2025-26 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் பிப்ரவரி 1ம் தேதி (வரும் சனிக்கிழமை) தாக்கல் செய்ய இருக்கிறார். இது அவர் தாக்கல் செய்யக்கூடிய 8வது பட்ஜெட்.

இந்த பட்ஜெட் தாக்கலின் போது வெளிவரக்கூடிய அறிவிப்புகள் தங்களுக்கு சாதகமானதாக இருக்குமா என பொதுமக்கள், குறிப்பாக 'மிடில் கிளாஸ்' எனும் நடுத்தர குடும்ப மக்கள், மற்றும் தொழில்துறையினர் மிகுந்த ஆர்வத்துடன்எதிர்பார்த்து வருகின்றனர்.

பொதுமக்கள் பலரும் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள் மீதான கலால் வரி குறையுமா, அதனால் விலைவாசி கட்டுக்குள் வருமா என்று எதிர்பார்க்கின்றனர். மிடில் கிளாஸ் மக்களோ வருமான வரி உற்சவரம்பில் மாற்றம் வருமா என்று எதிர்பார்க்கின்றனர்.

தொழில்துறையினருக்கு இந்த பட்ஜெட்டின் மீது பல எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. 

தொழில் நகரமாக விளங்கும் கோவை சேர்ந்த ஜவுளி தொழில்துறையினர் பருத்தியின் மீதான 11% இறக்குவதியை ரத்து செய்ய வேண்டும் எனவும் மூலப் பொருட்கள் அனைத்தும் சர்வதேச விலையில் கிடைக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றனர். இதற்கு வழிவகை செய்யக்கூடிய அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் வரும் என்று எதிர்ப்பார்க்கின்றனர்.

கோவையில் மின் மோட்டார்களின் உற்பத்தி அதிகம். தேசிய அளவிலேயே மின்மோட்டார் உற்பத்தியில் கோவைக்கு என்று தனிய இடம் உண்டு. தற்போது பம்பு செட்டுகளுக்கு விதிக்கப்படும் 18 % ஜி.எஸ்.டி. வரியை 12% ஆக குறைக்க வேண்டும் என்கின்ற வேண்டுகோள் இந்த துறையினரிடம் உள்ளது.

அதேபோல சிறு,குரு நடுத்தர தொழில் துறைகளுக்கு தேவையான உதிரி பாகங்களை தயாரிக்க கூடிய தொழில்களுக்கு 12 % ஜி.எஸ்.டி விதிக்கப்பட்டுள்ளது. இதை 5% ஆக குறைக்க வேண்டும் என்கின்ற எதிர்பார்ப்பு இந்த தொழில் செய்பவர்களுடன் உள்ளது. மேலும் வங்கி கடன்களை திரும்ப செலுத்தக்கூடிய கால அவகாசத்தை 180 நாட்களாக உயர்த்த வேண்டும் என்கின்ற வேண்டுகோளும் உள்ளது.

'மிடில் கிளாஸ்' என்று சொல்லக்கூடிய நடுத்தர குடும்ப மக்கள் வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் கொண்டுவரப்படும் என்று எதிர்பார்க்கிறார்கள். ரூ.5 லட்சம் வரை ஆண்டு வருமானம் ஈட்டும் தனி நபர்களுக்கு வரிவிலக்கு வழங்கவேண்டுமென எதிர்பார்ப்புள்ளது.

பிப்.1 ஆம் தேதி என்ன நடக்கிறது என பாப்போம்.