தமிழ்நாடு எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷனின் (ELCOT) சார்பில் ரூ.114.16 கோடி மதிப்பில் கோவை விளாங்குறிச்சி பகுதியில் கட்டப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்ப பூங்காவில் கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இன்னும் 2 வார காலத்தில் அது தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் திறந்து வைக்க வாய்ப்புள்ளதாக தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று கோவையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஐ.டி. பூங்கா வளாகத்தில் ஆய்வு நடத்திய பின்னர் செய்தியாளர்களை அமைச்சர் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், பிப்ரவரி 2020ல் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு சில காரணங்களால் இந்த திட்டம் நிறைவேற காலதாமதம் ஆனது. இன்றைக்கு சுமார் 3 லட்சம் சதுர அடி மொத்த அளவில் இந்த 6 தளங்கள் கொண்ட கட்டிடம், திட்டமிடுதலில் இருந்த குறைகளை தாண்டி கிட்டத்தட்ட முடிகிற அளவிற்கு வந்திருக்கிறது. தமிழக முதலமைச்சரால் விரைவில் (என் கணிப்பில்) இரண்டு வாரங்களில் இது திறந்து வைக்கப்படும் என்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம், என்றார்.
கோவையில் ஐ.டி. அலுவலக இடங்களுக்கு டிமாண்ட் அதிகமாக இருக்கிறது. முதலமைச்சர் இந்த கட்டிடத்தை திறந்து வைத்தவுடன் உரிய வழிமுறைகளை பின்பற்றி எவ்வளவு வேகமாக இந்தபூங்காவில் உள்ள அலுவலகங்களை குத்தகைக்கு விட முடியுமோ அதை விரைவில் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
இந்த பூங்காவில் 3250 பேர் வேலை செய்ய வாய்ப்புள்ளது. ஒரு சில ஐ.டி. நிறுவனங்கள் முழு கட்டிடத்தையும் தங்களுக்கு கொடுக்க வேண்டும் என்று கேட்கிறார்கள். ஆனால் அரசு பல சிறு நிறுவனங்களுக்கும், ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கும் இதில் பணிபுரிய வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதற்காக ELCOT நிர்வாக இயக்குனரிடம் இதுபற்றி விதிமுறையை உருவாக்க அமைச்சர் அறிவுரை கூறியுள்ளார்.
இந்த பூங்காவில் 15,000 சதுர அடி கோ-வர்கிங் ஸ்பேஸ் மற்றும் ஸ்டார்ட் ஆப் நிறுவங்களுக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோவை விளாங்குறிச்சி ELCOT ஐ.டி. பூங்கா பணிகள் நிறைவு! 2 வாரங்களில் திறக்கப்பட வாய்ப்பு - அமைச்சர் தகவல்!
- by David
- Sep 26,2024