கோவையில் நடைபெறும் 24x7 குடிநீர் விநியோக திட்ட பணிகள் 75% நிறைவேற்றம்!
- by David
- Feb 20,2025
கோவை மாநகரின் எல்லை 2011ல் விரிவாக்கம் செய்யப்பட்டு மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் 100 வார்டுகளாக வரையறை செய்யப்பட்டது.
விரிவாக்கத்திற்கு முன்பு கோவை மாநகராட்சியின் கீழ் இருந்த 60 வார்டுகளில் 24 மணி நேரம் இடைநில்லா குடிநீர் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதை சூயஸ் எனும் தனியார் நிறுவனம் செயல்படுத்தி வருகிறது.
இந்த திட்டத்தின் கீழ், கோவை மாநகரில் மொத்தம் 1,50,000 இடைநில்லா குடிநீர் இணைப்புகள் வழங்க வேண்டும். சமீபத்திய தகவல்கள் படி இதில் 1,15,801 இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளதாக தெரிய வருகிறது.
இந்த திட்டத்தின் கீழ் 1,822 கிலோமீட்டர் நீளத்திற்கு புதுக் குழாய்கள் பொருத்தப்பட வேண்டும். இதில் தற்போது வரை 1,637.91 கிலோமீட்டர் நீளத்திற்கு குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளன. 33 தொட்டிகள் கட்டப்பட வேண்டிய இடத்தில் 26 தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன. மீதமுள்ள 7 தொட்டிகளுக்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
தற்போது வரை இந்த 24 மணி நேர இடை நில்லா குடிநீர் வழங்கும் திட்டம் 75% நிறைவு பெற்றுள்ளது. அடுத்த பத்து மாதத்திற்குள் இந்த திட்டப்பணிகள் நிறைவடைந்து விடும் என்று எதிர்பார்ப்பதாக கோவை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
2019ல் துவங்கிய இந்த திட்டம் 2023 டிசம்பரில் முடிக்கப்பட்டு இருக்க வேண்டும். கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இந்த திட்டம் 83. 5% நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்தன. இதை மாநகராட்சியே தெரிவித்திருந்தது. மேலும் 2025 ஜனவரிக்குள் இந்த திட்டத்தை முடித்து விடலாம் என்று மாநகராட்சி எதிர்பார்த்தது. ஆனால் இப்போது 2025 டிசம்பருக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளது.
கூடுதல் தகவல்:
மேலே குறிப்பிடப்பட்ட படி மாநகரின் பழைய 60 வார்டுகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதே சமயம் இந்தப் பகுதிகளில் வழங்கப்பட உள்ள இடை நிலா குடிநீரின் அழுத்தம் எந்த அளவு உள்ளது என்பதை கண்காணிக்க இந்த 60 வார்டுகளும் 97 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. குடிநீர் இணைப்புகள் பெறும் இல்லங்கள் இரண்டாம் தளத்தில் இருந்தாலும் அதிக அழுத்தத்துடன் குடிநீர் விநியோகம் செய்யப்படுவதால் மோட்டார் இல்லாமலேயே மேல் தளத்திற்கு வரக்கூடிய படி இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பிரிக்கப்பட்ட 97 பகுதிகளில் 52 பகுதிகளில் இடைநில்லா குடிநீர் வினியோகம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த 52 பகுதிகளில் 34 தொடர் விநியோகமும், 18ல் அவ்வப்போது இடைவெளி விட்டு இடைநில்லா குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.