கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் உள்ள விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில் மாமன்ற சாதாரணக் கூட்டம் இன்று நடைபெற்றது. 

இந்த கூட்டத்திற்கு கோவை மேயர் ரங்கநாயகி தலைமையேற்றார். மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், கோவை துணை மேயர் வெற்றிசெல்வன், துணை ஆணையாளர் க.சிவகுமார் உடன் மாநகராட்சி குழுவினர், அரசு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் மொத்தம் 85 பொருட்கள் மாமன்றத்தின் முன் வைக்கப்பட்டு மாமன்றத்தின் ஒப்புதலுக்காக வேண்டப்பட்டது. அதில், கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள குளம், குட்டை ஏரி, வாய்க்கால், ஓடை மற்றும் மழைநீர் வடிகால் உள்ளிட்ட நீர்நிலைகளில் நீர்வரத்து சரிவர இல்லாமலும் பல இடங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு தூர்வாரப்பட முடியாமலும் உள்ளதால் மாநகராட்சியால் மேற்படி நீர்நிலைகளை முறையாக பராமரிக்க இயலாத நிலை உள்ளது என தெரிவிக்கப்பட்டது.

எனவே, மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள குளம், குட்டை ஏரி, வாய்க்கால், ஓடை மற்றும் மழைநீர் வடிகால் உள்ளிட்ட நீர்நிலைகளில் கணக்கெடுப்பு செய்து ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து புனரமைக்கும் பணிகளுக்காக நீர்நிலைகளில் நிலஅளவை பணிகளை, தற்போதுள்ள நிலஅளவர்களுடன் இணைந்து மேற்கொள்ள மண்டலம் ஒன்றிற்கு சிவில் இன்ஜினியரிங் பிரிவில் டிப்ளோமா முடித்த 4 நபர்கள் வீதம் 20 நபர்களை 6 மாதகாலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க மாமன்றத்தின் ஒப்புதல் கேட்டுக்கொள்ளப்பட்டது.