கோவை மாநகரம் நவ இந்தியா பகுதியில் உள்ள இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. 

இதில் 295 தனியார் நிறுவனங்கள் தங்களிடம் உள்ள 15,000 - 20,000 காலி பணியிடங்களை நிரப்ப பங்கேற்றனர். 8 வகுப்பு முதல் பட்டம் பெற்றவர்கள் வரை சுமார் 4000 வேலைதேடும் நபர்கள் இந்த முகாமில் கலந்துகொள்ள  பதிவு செய்து இருந்தனர்.

இவர்கள் இன்று முகாமில் கலந்துகொண்டு தங்களுக்கு விருப்பமுள்ள நிறுவனங்களில் உள்ள பணிகளை பெற முயன்றனர். இந்த முகாம் மூலம் பணிகளுக்கு தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்வு அதே இடத்தில் நடைபெற்றது.

இதில் தமிழக மின்சார துறை அமைச்சரும் கோவை மாவட்டத்தின் வளர்ச்சிக்கான பொறுப்பு அமைச்சருமான செந்தில் பாலாஜி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார், ஆணையர் சிவகுரு பிரபாகரன், கோவை பாராளுமன்ற உறுப்பினர் 'கணபதி' ராஜ் குமார், கோவை மேயர் ரங்கநாயகி, இந்துஸ்தான் கல்வி குழுமத்தின் நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன் ஆகியோர் முன்னிலையில் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.