20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள மின் வாரிய மேற்பார்வை பொறியாளர், தலைமை பொறியாளர் அலுவலக நுழைவாயிலில் மின் வாரிய ஊழியர்களின் தொடர் காத்திருப்பு போராட்டம் இன்று காலை துவங்கியது.

கோவை மாநகரில், டாடாபாத் பகுதியில் உள்ள மின் வாரிய அலுவலகத்தில் இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் மின் வாரிய ஊழியர்கள் பெரும்திரளாக கலந்து கொண்டு போராட்டத்தில் தங்கள் கோரிக்கைகளை கோஷங்களாக எழுப்பி வருகின்றனர். 

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், தமிழகம் முழுவதும் 33,000 துக்கும் அதிகமாக உள்ள ஆரம்ப நிலை காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், வேலைப்பளு ஒப்பந்தத்திற்கு எதிராக வெளியிடப்பட்டுள்ள Redeployment, Discontinue உத்தரவுகளை திரும்பப் பெற வேண்டும், மின்வாரியத்தை பல கூறுகளாகப் பிரித்து தனியார் மயப்படுத்தும் நடவடிக்கையை கைவிட வேண்டும், டிசம்பர் 1, 2019க்கு பின் வாரிய பணியில் சேர்ந்தவர்களுக்கு ஊதிய உயர்வு 6% வழங்கிட வேண்டும், மின்விபத்தில் உயிரிழக்கும் மின்வாரிய பணியாளர்களுக்கு சிறப்பு நிதி ரூ.10 லட்சம் அறிவித்ததற்கான அரசாணை வாரிய உத்தரவு வெளியிடவேண்டும், ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் பகுதிநேர ஊழியர்களை அடையாளம் கண்டு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என அரசை வலியுறுத்தி கேட்டுக்கொண்டனர்.