சென்ற வருடம் இதே மாதத்தில் வெள்ளலூர் குப்பை கிடங்கில் பெரும் தீ விபத்து ஏற்பட்டு, காற்றின் தரம் அப்பகுதியில் பெரிதும் பாதிக்கப்பட்டது. மாநகராட்சிக்கு இந்த தீயை முற்றிலும் அணைக்கும் பணிக்கு பெரும் பொருட்செலவு ஏற்பட்டது.

இந்நிலையில் குப்பை கிடங்கில் இதுபோல சம்பவம் நடைபெறாமல் இருக்க மாநகராட்சி பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

வெள்ளலூர் குப்பை கிடங்கில் ஏற்கனவே ஒரு நீர்த்தேக்கக்குளம் செயல்பட்டு வருகிறது. இங்கு மேலும் இரு நீர்த்தேக்கக்குளங்கள் மேம்படுத்தப்பட்டு நீர் சேகரிக்கவும், அவற்றை குப்பைக் கிடங்கு உபயோகம், தீத்தடுப்பு போன்ற அவசர கால தேவை மற்றும் நடப்பட்டுள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்றவும் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கொட்டப்பட்டுள்ள பழைய குப்பைகள், தீப்பிடிக்காவண்ணம் தீயணைப்பு வாகனங்கள் சென்று வரும் வகையில் சாலை அமைத்து பிரிக்கப்பட்டுள்ளன. மேலும், 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரை மட்டத் தொட்டி மற்றும் 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத் தொட்டி கட்டப்பட்டு, கிடங்கில் 1000 மீட்டர் நீளத்திற்கு தண்ணீர் குழாய்கள் மற்றும் தீ அணைப்பு முனையங்கள் நிறுவப்பட்டுள்ளன.

குப்பை கிடங்கினுள் வெளியாட்கள் / சமூக விரோதிகள் நுழைவதை தடுக்கும் விதமாக உயர் மட்ட கண்காணிப்பு கோபுரம், சிசிடிவி கேமராக்கள், புதிய அணுகு சாலை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

குப்பைக் கிடங்கினை 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கொண்ட குழு மற்றும் 12 எண்ணிக்கையிலான முழு நேர காவலர்கள் குடிநீர் டேங்கர் லாரி மற்றும் 12 தீயணைப்பு கருவிகள் பொருத்தப்பட்ட டீசல் மோட்டார்கள் தயார் நிலையில் உள்ளது. தீயணைப்பு அசம்பாவிதங்களை தடுக்க தீயணைப்புத்துறை வாகனம் ஒன்று தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர் மாநகராட்சியில் சேகரமாகும் மக்கும் குப்பைகளை தனியாக சேகரித்து எரிசக்தி உருவாக்கும் திட்டம் (Waste to Energy Plant மூலம் செயல்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.