இறுதிக்கட்டத்தில் உக்கடம் பேருந்து நிலைய தரமுயர்த்தல் பணிக்கான விரிவான திட்ட அறிக்கை!
- by David
- Feb 22,2025
கோவை மாநகரில் அடுத்தடுத்து பல மாநகராட்சி பேருந்து நிலையங்கள் தரமுயர்த்தப்படவுள்ளன. அந்த வரிசையில், உக்கடம் பேருந்து நிலையம், காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம் மற்றும் சிங்காநல்லூர் பேருந்து நிலையம் புதுப்பிக்கப்படவுள்ளன.
உக்கடம் மேம்பால திட்டப்பணிகளுக்காக அங்கு இருந்து பேருந்து நிலையம் இடிக்கப்பட்டது. இந்த பேருந்து நிலையம் ரூ.20 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்படும் என தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் 2024 மார்ச் மாதம் கோவை வந்தபோது அறிவித்தார்.
உக்கடம் பேருந்து நிலையம் இருந்த இடத்தில் அதை நவீன வசதிகளுடன் புதுப்பிக்கவும், உக்கடம் காவல் நிலையம் எதிர்புறம் உள்ள காலி இடத்தில் புதிதாக மற்றொரு பேருந்து நிலையம் ஒன்றை அமைக்கவும் சுமார் ரூ. 21.55 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது, மேலும் இந்த அறிக்கை தயாரிக்கும் பணியில் சென்னை ஐ.ஐ.டி.-யை சேர்ந்த நிபுணர் குழு ஈடுபட்டது. உக்கடத்தில் கோவை மெட்ரோ ரயில் திட்ட பணிகள் நடைபெறவுள்ளதால் அதற்கு ஏற்ப சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தினருடன் ஆலோசித்து, விரிவான திட்ட அறிக்கையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
அறிக்கையில்,மெட்ரோ ரயில் திட்டம் எளிதாக நடைபெற தேவையான வசதிகளும், இதனால் பேருந்து நிலையம் திட்டம் பாதிக்கப்படா வகையிலும் திருத்தங்கள் செய்ய கூடுதல் கால அவகாசம் எடுத்துக்கொள்ளப்பட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இதை அண்மையில் தமிழக அரசின் நகராட்சி நிர்வாக இயக்குநரகத்திடம் கோவை மாநகராட்சி சமர்ப்பித்தது.
அதை ஆராய்ந்த இயக்குனரகம், பேருந்து நிலைய திட்டத்தின் வடிவமைப்பு உள்பட சில மாற்றங்களை செய்ய அறிவுறுத்தியுள்ளது. எனவே இந்த மாற்றங்களை அறிக்கையில் செய்ய சென்னை ஐ.ஐ.டி.-யை சேர்ந்த நிபுணர் குழுவை மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது. இன்னும் 2 தினங்களில் அந்த மாற்றங்கள் செய்யப்பட்டு, மீண்டும் இயக்குநரகத்திடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என தகவல்கள் கூறுகின்றன.