கோவை போத்தனூர் பகுதியில் பாம்பு ஒன்று பதுங்கி இருப்பதாக வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை சேர்ந்த பாம்பு பிடி வீரர் மோகன் என்பவருக்கு தகவல் தரப்பட்டது.

பாம்பை பிடிக்க சென்ற பாம்பு பிடி வீரர் மோகன், பாம்பை பத்திரமாக மீட்டார்.  மீட்கப்பட்ட பின்னர் அந்த பாம்பு மரபணு குறைபாடு உடைய அறிய வகை வெள்ளை நாகம் என்பது தெரிய வந்தது.கொடிய விஷம் உடைய இந்த வெள்ளை நாகப்பாம்பு பத்திரமாக மீட்கப்பட்டு பாட்டிலில் அடைத்து, வனத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது. அதற்கு பின்னர் அதன் வாழ்விடத்தில் அது விடப்படும் என கூறப்பட்டுள்ளது. 

பாம்பை அடிக்கவேண்டாம்!

நாகப்பாம்பு உட்பட எந்த பாம்பையும் பொதுமக்கள் பார்க்கும் போது, அதனை அடிக்கவோ பிடிக்கவோ முயற்சிக்கக்கூடாது என தெரிவித்த வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை சார்ந்த பாம்பு பிடி வீரர் மோகன், பாம்பு பிடிப்பதற்கான கைதேர்ந்த பாம்பு பிடி வீரர்கள் மற்றும் வனத்துறைக்கு இது குறித்து தகவல் தர வேண்டும் எனவும், அவ்வாறு தகவல் தரும் பட்சத்தில் பாம்பு பத்திரமாக மீட்கபட்டு, அதன் வாழ்விடத்தில் விடப்படும் எனும் தெரிவித்திருக்கின்றார்.

பாம்பால் ஏதேனும் சிரமம் ஏற்பட்டால் எங்கு தெரிவிப்பது?

மனிதர்கள் பாம்பு மற்றும் பிற வனவுயிர்களை எதிர்கொள்ள நேரிட்டால், வனத்துறையிடம் தகவல் தெரிவிக்க 1800 4254 5456 எனும் இலவச எண்னை தொடர்புகொள்ளலாம்.  இது 24 மணி நேரமும் செயல்படும். 2017ஆகஸ்ட் மாதம் முதலே இந்த வசதி செயல்பாட்டில் உள்ளது.

இந்த எண்ணை அழைக்கும்போது கோவையில் உங்கள் வீடு/கடை எங்கிருந்தாலும் அந்த பகுதிக்கு வனத்துறை தரப்பில் வீரர்கள் வருவார்கள் அல்லது அருகில் உள்ள பாம்புப்பிடி வீரர்களை வனத்துறையினர் அனுப்பி வைப்பார்கள். எனவே முதலில் வனத்துறையினரிடம் தகவல் தெரிவிப்பதை நினைவில் கொள்ளுங்கள்.

தமிழகத்தில் மாவட்ட வாரியாக அங்கீகரிக்கப்பட்ட பாம்பு பிடி வீரர்கள் பற்றிய தகவல் அடங்கிய தொகுப்பு தயாரிக்கப்பட்டு வருவதாகவும், இது விரைவில் வெளியாக உள்ளது எனவும் தமிழக வனத்துறை செயலர் சுப்ரியா சாகு தெரிவித்துள்ளார்.