மேட்டுப்பாளையம் பகுதியில் 1966ல் கட்டி முடிக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்த பில்லூர் அணை இதற்கு முன்பு தூர்வாரப்பட்டது இல்லை.

55 ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாரப்படாமல் உள்ள இந்த 100 அடி கொள்ளளவு கொண்ட அணையில் 57 அடி வரை வண்டல் மண் தான் உள்ளது. இதன் காரணமாக அணையில் வெறும் 43 அடி வரை மட்டுமே நீரை நிரப்ப முடிகிறது.

இந்த அணையை எப்படி தூர் வாருவது என மே மாதம் அரசு ஆலோசனை நடத்தியது. அதன் பின் 'ஜியோ டியூப்'  கொண்ட புளோட்டிங் ட்ரெட்ஜ்ர் (floating dredger) எனும் பெரிய இயந்திரம் மூலம் வண்டல் மணலை அகற்ற முடிவு செய்யப்பட்டு இம்மாதம் 12 ஆம் தேதி (12.7.2024) பணிகள்  தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தின் மேற்பார்வையில் துவங்கியது.

புளோட்டிங் ட்ரெட்ஜ்ர் மூலம் அணையில் சேர்ந்துள்ள வண்டல் மணல் மெல்ல மெல்ல எடுக்கப்பட்டு, அதிக வலுமை கொண்ட துணியினால் ஆன ராட்சத டியூப் வழியே செலுத்தப்படும்.இதற்குள் தண்ணீரும், சகதியும் செல்லும்போது தண்ணீர் வெளியேறி விடும், வண்டல் மண் சேகரமான பின்னர் தனியே எடுக்கப்படும்.

தொடர்ந்து பில்லூர் அணை பகுதியில் லேசான மழை பெய்து வருவதால் இந்த பெரும் பணிக்கான ஆரம்பநிலை வேலைகளை செய்வதில் சவால்கள் எழுந்துள்ளன. சோதனை ஓட்டம் நடைபெறுகையில் ட்ரெட்ஜ்ர் இயந்திரத்தின் மோட்டாரில் பழுது ஏற்பட்டுள்ளது. அதை விரைந்து சரி செய்துள்ளனர். இதுபோன்ற சில சவால்களை கடந்து அடுத்த வாரத்தில் முழுமையான தூர்வாரும் பணி நடைபெறும் என தகவல்கள் கூறுகின்றன.

முதல் கட்டத்தில் 25,000 கியூபிக் மீட்டர் அளவுக்கு உள்ள வண்டல் மணலை அகற்ற அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். அதன் பின்னர் ஒரு வருடம் முழுவதும் இந்த பணி நடைபெறும் என தெரியவருகிறது. இந்த பணி மூலம் அணையில் நீர் தேக்க கூடுதல் இடம் கிடைக்கும்.