கோவை மாவட்டத்தின் ஹாக்கி விளையாட்டு வீரர்களின் கோரிக்கையை ஏற்று கோவை மாநகரின் ஆர்.எஸ். புரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி வளாகத்தை ஒட்டியுள்ள மைதானத்தில் சர்வதேச தரத்தில் செயற்கை புல்வெளி தளத்துடன் கூடிய ஹாக்கி மைதானம் ரூ.9.67 கோடி மதிப்பில் அமைக்கப்பட உள்ளது.

இந்த மைதானம் 6,500 சதுர அடியில் அமையும், சர்வதேச தரத்துடன் இருக்கும். மைதானம் அமையும் வளாகத்தில் 300 பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய வசதிகள், தேவையான பார்க்கிங் வசதி என அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்படும் என தகவல் உள்ளது.

இந்நிலையில் வரும் ஞாயிறு அன்று கோவை வரும் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த மைதான திட்டத்திற்கு அடிக்கல் நாட்ட உள்ளார் என தகவல் வெளிவந்துள்ளது.

துணை முதலமைச்சர் உதயநிதி  பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வரும் 23ம் தேதி (ஞாயிறு) கோவை வருகிறார். அப்போது ஹாக்கி மைதான திட்டத்துக்கு அடிக்கல் நாடுவதுடன் மாவட்டத்தில் முடிவுற்ற பணிகளைத் தொடங்கி வைப்பார் என தெரியவருகிறது.