கோவையில் சத்தியமங்கலம் புறவழி சாலை திட்டத்திற்கான பணிகளை விரைவில் துவங்க மாநில நெடுஞ்சாலை துறை திட்டமிட்டுள்ளது.

இந்த திட்டத்திற்கான நிலங்களை அரசு கையகப்படுத்த உள்ளது என்கிற அறிவிப்பு பொது தளங்களில் ஒரு சில நாட்களில் வெளியாகும் எனவும், இந்த திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தல் தொடர்பாக நில உரிமையாளர்களிடம் விரைவில் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

4 வழி பசுமை சாலையாக திட்டமிடப்பட்டுள்ள இந்த புறவழி சாலை மொத்தம் 92 கிலோ மீட்டர் தொலைவுக்கு அமைக்கப்படும். இந்த புறவழி சாலை கோவை மாவட்டம் கோவில்பாளையம் அருகே உள்ள குரும்பபாளையம் கிராமத்தில் துவங்கி அன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையை கடந்து, புளியம்பட்டி வழியாக சத்தியமங்கலத்தை அடையும். சத்தியமங்கலத்திலிருந்து தமிழக-கர்நாடக எல்லை பகுதி அருகே உள்ள ஹாசனூரில் முடிவடையும்.

கோவை - சத்தி தேசிய நெடுஞ்சாலையில் புதிதாக புறவழிச் சாலை அமைக்கும் போது 800 ஏக்கர் விவசாய நிலம் பறிபோகக்கூடும் என்கின்றனர் கொங்கு விவசாயிகள் பாதுகாப்பு குழுவினர்.

மேலும் இந்த புறவழி சாலை சத்தியை அடுத்து வனப்பகுதியில் இணைவதால் புலிகள் காப்பகத்தில் உள்ள விலங்குகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படும், மனித விலங்குகள் மோதல் அதிகரிக்கும். எனவே கோவை - சத்தி தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்தி மேம்படுத்த வேண்டும், புறவழி சாலை திட்டத்தை கைவிட வேண்டும் என கூறுகின்றனர்.