அரசு பஸ் மோதி கல்லூரி மாணவர் பலி

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள புதுவளவு ஜெகநாதன் தெருவை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மகன் ஸ்ரீதரன் (20). இவர் கோவை பீளமேட்டில் நண்பர்களுடன் அறை எடுத்து தங்கி தனியார் கல்லூரியில் இன்ஜினியரிங் படித்து வந்தார்.

நேற்று காலை வழக்கம் போல கல்லூரிக்கு சென்ற ஸ்ரீதரன் மாலையில் பைக்கில் தான் தங்கி இருக்கும் அறைக்கு திரும்பி கொண்டிருந்தார். அவர் அவிநாசி ரோட்டில் 97 வது பில்லர் அருகே சென்ற போது அந்த வழியாக சங்ககிரியில் இருந்து கோவை நோக்கி வந்த வந்த அரசு பஸ் எதிர்பாராத விதமாக ஸ்ரீதரன் ஒட்டி சென்ற பைக் மீது மோதியது.

இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் சிங்காநல்லூரில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து கோவை கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் பஸ் டிரைவர் சேலம் எடப்பாடி ரெட்டிபட்டியை சேர்ந்த ராஜ்குமார்(44) மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மசாஜ் சென்டரில் விபசாரம்! 5 பேர் கைது

கோவை நகரில் சுமார் 150க்கும் மேற்பட்ட மசாஜ் சென்டர்கள் உள்ளன. இவற்றில் சில உரிமம் பெற்றும், பல உரிமம் பெறாமலும் இயங்கி வருகின்றன. இங்கு இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் நடக்கிறது. போலீசார் ரெய்டு நடத்தி நடவடிக்கை எடுத்தாலும் இந்த பிசினஸ் ஜோராக நடக்கிறது.

இந்நிலையில், சுந்தராபுரம் சிக்னல் அருகே உள்ள ஒரு காம்ப்ளக்சில் செயல்பட்டு வரும் மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், நேற்று போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது, அங்கு மசாஜ் என்ற பெயரில் பல இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் விபசார புரோக்கர் மதுக்கரை அறிவொளி நகரை சேர்ந்த ராஜீவி (30) மற்றும் விபசாரத்தில் ஈடுபட்ட மகாராஷ்டிரா, கோவை, திருப்பூரை சேர்ந்த 4 இளம்பெண்களை கைது செய்தனர். பின்னர் 5 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கோவையில் 78 கிலோ குட்கா பறிமுதல் ... கடைக்காரர்கள் 3 பேர் கைது

கோவையில் புகையிலைப்பொருட்கள் (குட்கா) விற்பனையை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மளிகை கடைகள், பெட்டிக்கடைகளில் பதுக்கி விற்போரை சோதனையின் மூலம் கண்டறிந்து நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.

இதேபோல், நேற்று உக்கடம் போலீசார் இஸ்மாயில் தெருவில் உள்ள ஒரு பள்ளி அருகே கடையில் சோதனை செய்தனர். அப்போது அங்கு புகையிலைப்பொருட்களை பதுக்கி விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அங்கிருந்த 78 கிலோ புகையிலையை பறிமுதல் செய்தனர். விற்பனையில் ஈடுபட்ட ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த தினேஷ்குமார்(27) என்பவரை கைது செய்தனர்.

இதேபோல், கோவை ராமநாதபுரம் போலீசார் நேற்று நஞ்சுண்டாபுரத்தில் உள்ள பெட்டிக்கடையில் சோதனை செய்தனர். அப்போது அங்கு ஹான்ஸ், கூல் லிப் ஆகிய புகையிலைப்பொருட்களை பதுக்கி விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த சதீஷ்குமார்(33), ஹரிஹரன்(21) ஆகிய இருவரை கைது செய்தனர். கடையில் இருந்து 120 புகையிலை பாக்கெட்டுகள் மற்றும் ரூ. 12,380 பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் கைது செய்யப்பட்டவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

கோவையில் பெண் காதலர்கள் மாயம்

கோவை சின்ன வேடம்பட்டி பகுதியை சேர்ந்தவர் 20 வயது இளம்பெண். இவர் ரேஸ்கோர்சில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் காலையில் அவர் தனது பெற்றோரிடம் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் இரவில் அவர் வீடு திரும்பவில்லை்.

செல்போனை தொடர்பு கொள்ள முயன்ற போது ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் இளம் பெண் வேலை பார்க்கும் இடத்திற்கு சென்று தனது மகள் குறித்து விசாரித்தனர். எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து அந்த பெண்ணின் பெற்றோர் சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான இளம் பெண்ணை தேடினர். அவர் வேலை பார்க்கும் இடம், தோழிகள் வட்டாரத்தில் விசாரித்த போது, மாயமான அந்த இளம் பெண்ணுக்கும், அவருடன் வேலை பார்த்த இளம் பெண்ணுக்கும் காதல் உறவு இருந்ததாகவும், இருவரும் ஒரே நேரத்தில் மாயமானதும் தெரிய வந்தது.

இதனை அடுத்து போலீசார் மேற்கொண்டு விசாரித்து அவர்களை தேடி வருகின்றனர்.