கோவை மாவட்டத்தின் முதல் கணித பூங்காவில் கட்டுமான பணிகள் பெருமளவு முடிந்துள்ளது! விரைவில் திறக்க வாய்ப்பு...
- by David
- Jan 15,2025
கோவை வ.உ.சி பார்க் வளாகத்தில் மாநகராட்சி சார்பில் உருவாகி வரும் ராமானுஜன் கணித பூங்காவில் கட்டுமான பணிகள் பெருமளவு முடிந்துள்ளது. இதனால் இப்பணிகள் வேகமாக முடிக்கப்பட்டு விரைவில் பூங்கா திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோவை வ.உ.சி மைதானம் பின்புறத்திற்கு எதிரே 50 சென்ட் நிலப்பரப்பில் ரூ.60 லட்சம் மதிப்பில் கணித மேதை ராமானுஜர் பெயரில் கணித பூங்கா அமைந்துவருகிறது. கணிதம் குறித்த கோட்பாடுகளை மாணவர்கள் எளிதாக அறிந்துகொள்ளக்கூடிய மாதிரிகளை கொண்ட பூங்காவாக இது உருவாகிவருகிறது.
மாநகராட்சி சார்ப்பில் டாடாபாத், அழகப்பா செட்டியார் சாலையில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ. 51 லட்சம் மதிப்பீட்டில் 30 சென்ட் பரப்பளவில் கட்டப்பட்ட அறிவியல் பூங்காவிற்கு கிடைத்த அமோக வரவேற்பை அடுத்து கணித பூங்காவை கட்ட கோவை மாநகராட்சி ஆர்வம் காட்டியது.
பணிகள் இப்போது வேகமாக நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் கணிதத்திற்கென முதல் பிரத்தியேக பூங்காவாக இது கட்டப்பட்டு வருகிறது. 2024 டிசம்பர் மாத இறுதியிலேயே நிறைவேறும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த பூங்காவில் பணிகள் கொஞ்சம் மீதம் இருப்பதால் அது முடிக்கப்பட்டு விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும்.
கணிதம் கடினம் என்று நினைக்கும் குட்டீஸ் ஏராளம். அவர்கள் வ.உ.சி பூங்கா பகுதியில் விளையாட வருகையில் கணித பூங்காவிற்கு ஒரு விசிட் அடித்தால் அது குறித்த எண்ணம் மாற இந்த பூங்கா ஒரு காரணமாக அமையும் என எதிர்பார்ப்போம். விரைந்து முடிக்குமா மாநகராட்சி?...