கோவை மாநகரில் உள்ள பழைய அவிநாசி சாலை மேம்பாலம் அருகில் வரும் ஆடிஸ் வீதி பகுதியில் சுமார் 30 மீட்டர் நீளத்திற்கு வடிகாலுடன் கூடிய ரெடிமேடு சிறுபாலம் அமைக்கும் பணிகள் இன்று மாலை 7 மணிக்கு துவங்கியது.

இது எதற்காக?

கடந்த ஞாயிறு அன்று கோவை மாநகரில் பெய்த கனமழை அவிநாசி சாலை மேம்பாலத்தின் சுரங்கப்பாதை மற்றும் சிவானந்தா காலனி ரயில்வே சுரங்கப்பாதை ஆகிய 2 இடங்களில் பெரிய அளவில் மழைநீர் தேங்கியது. இதன் காரணமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இந்த 2 இடங்களில் தேங்கும் மழை நீரை விரைவாக வெளியேற்ற தற்போது திட்டமிடப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக இன்று அவிநாசி சாலை மேம்பாலம்- ஆடிஸ் வீதி இடையேயான இடத்தில் PRECAST எனும் முறையில் சுமார் 30 மீட்டர் நீளத்திற்கு வடிகாலுடன் கூடிய ரெடிமேடு சிறுபாலம் அமைக்கும் பணி துவங்கியது.

கனமழை பெய்யும் போது, கோவை மாநகரிலுள்ள நஞ்சப்பா சாலை, VOC பார்க், RS புரம் போன்ற பகுதிகளில் இருந்து மழைநீர் அவிநாசி சாலை மேம்பாலம் கீழ் பகுதி நோக்கி வர வாய்ப்புகள் உள்ளது. இங்கு ஏற்கனவே மழைநீர் வடிகால்,  மோட்டார் மற்றும் பம்ப் அமைப்புகள் மூலம் மழைநீரை வெளியேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், நஞ்சப்பா சாலை, VOC பார்க், RS புரம் போன்ற பகுதிகளில்  அதிக மழை பெய்யும் போது உருவாகும் மழைநீரை கையாள இந்த வசதி பத்தாது.

எனவே இப்பகுதி நோக்கி வரும் அதிக அளவு மழைநீரை கையாள பெரிய அளவிலான கட்டமைப்பு உருவாக்கி, அதன் மூலம் நீர் தேகத்தை குறைத்து, பின்னர் அங்கிருந்து குளத்திற்கு நீரை எடுத்து செல்ல திட்டமிடப்பட்டு தற்போது அந்த பணிகள் நடைபெற துவங்கி உள்ளது.

இங்கு PRECAST எனும் ரெடி மேட் கான்கிரீட் பிளாக்குகள் கொண்டு உருவாகும் வடிகால் வழியே நிமிடத்திற்கு 5 லட்சம் லிட்டர் மழை நீர் கடந்து செல்ல முடியும். இதனால் குளங்களுக்கு சுமையின்றி தண்ணீரை எடுத்து செல்ல முடியும். ரூ.50 லட்சம் மதிப்பில் நடைபெறும் இந்த கட்டுமான பணிகளை 1 வாரம் முதல் 10 நாட்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இத்துடன் 100 மீட்டருக்கு மற்றொரு வடிகாலும் அமையவுள்ளது.

கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார், மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் இந்த பணிகள் நடைபெறுவதை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைவாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினர்.

இதே போல சிவானந்தா காலனி சுரங்கப்பாதை பகுதியிலும் இப்படி ஒரு கட்டமைப்பை ஏற்படுத்த திட்டமுள்ளது.

மாநகரில் உள்ள அனைத்து சுரங்கப்பாதைகளிலும் மோட்டர் மற்றும் ஜென்செட் வைக்கப்பட்டுள்ளது. கூடுதல் தேவைகள்குறித்து கணக்கிடப்பட்டு அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் கோவை மாநகரின் பல இடங்களில் மழைநீர் வடிகால்கள் உருவாக்குவது, மாநகரில் உள்ள 6 சுரங்க பாதைகளில் மழைநீர் தேங்காமல் இருக்க  தேவையான நடவடிக்கைகள் எடுக்க திட்டமுள்ளது.