தனியார் இடத்தில் வேட்டை தடுப்பு காவலர்கள் பணியை வழங்குவது என்பது ஏற்புடையது அல்ல. இதுகுறித்து உயர் அதிகாரிகளை வருகின்ற 27, 28 ஆம் தேதிகளில் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக வேட்டை தடுப்பு காவலர்களுக்கு ஆதரவாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.
தமிழக வனத்துறையில் உள்ள வேட்டை தடுப்பு காவலர்கள் பணி தனியார் வசம் ஒப்படைக்க அரசு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இதற்கான நகர்வுகள் 2023 ஜூன் மாதம் முதலே நடைபெற்று வந்தது. இந்நிலையில் இப்படிப்பட்ட தீர்மானத்தை அரசு முன்னெடுக்க வேண்டாம் என தமிழகம் முழுவதும் உள்ள தமிழ்நாடு வனத்துறை வேட்டை தடுப்பு காவலர்கள் முறையிட்டு வருகின்றனர்.
இன்று கோவை மாவட்ட வன அலுவலகத்தில் மாவட்ட வன பாதுகாப்பு அலுவலர் ராமசுப்பிரமணியத்திடம் இதுகுறித்து முதுமலை, மேகலை, களக்காடு, தேனி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த வேட்டை தடுப்பு காவலர்கள் கோரிக்கை விடுத்து அதை தமிழக அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
அவர்களுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் இணைந்து மாவட்ட வன பாதுகாப்பு அலுவலரை சந்தித்து வேட்டை தடுப்பு காவலர்களின் கோரிக்கைகள், அவர்கள் காடுகளில் சமாளிக்கும் சவால்கள் குறித்து எடுத்துரைத்தார். மேலும் தனியார் வசம் ஒப்படைத்தால் இவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் கூறினார்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முத்தரசன், வேட்டை தடுப்பு காவலர்கள் பலரும் பட்டதாரிகள், குறிப்பாக பழங்குடியின மலைவாழ் பகுதியை சார்ந்தவர்கள் தான் வேட்டை தடுப்பு காவலர்களாக இருப்பதாக கூறினார்.
இந்நிலையில் தமிழக அரசு இந்த பணியை தனியாரிடம் ஒப்பந்த அடிப்படையில் ஒப்படைக்க திட்டமிட்டு வருவதாக தெரிவதாகவும் அவ்வாறு செய்யும் பட்சத்தில் இவர்களுக்கும் வனத்துறைக்கும் உள்ள தொடர்பு துண்டிக்கப்படும் என தெரிவித்தார். எனவே உடனடியாக தமிழக அரசு இந்த போக்கை கைவிட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
வேட்டை தடுப்பு காவலர் பணிகளை தனியார் வசம் ஒப்படைக்க வேண்டாம்! கோவையில் பணியாளர்களுக்கு ஆதரவாக களமிறங்கியது கம்யூனிஸ்ட் கட்சி
- by CC Web Desk
- Nov 22,2024