மின்சார வாகனங்களுக்கு தேவையான பாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் நமது கோவையிலேயே 70 உள்ளது என்றால் நம்ப முடிகிறதா?

கல்வி, மருத்துவம், தொழில்துறை ஆகிய பிரிவுகளில் தேசிய அளவில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ள கோவை, தற்போது வளர்ந்து வரும் புது வாகன தொழில்நுட்ப துறையான மின்சார வாகன உற்பத்திக்கு ஒரு முக்கிய பகுதியாக உருவெடுத்து வருகிறது.

கோவையில் 2 சக்கர மின்சார வாகனங்களுக்கு பாகங்களை உற்பத்தி செய்யக்கூடிய நிறுவனங்களுக்கு, இந்த வகை வாகனங்களுக்கு முக்கியமான பாகங்களாக பார்க்கப்படும் மின் மோட்டார் மற்றும் கண்ட்ரோலர்கள் ஆகியவற்றை சோதனை செய்து பார்க்க ஒரு நவீன பொது சோதனை வளாகம் தேவைப்படுகிறது என்பதை அறிந்து கொண்ட 'அறிவியல் மற்றும் தொழில் துறை சோதனை மற்றும் ஆராய்ச்சி மையம்' (சிட்டார்க்) எனும் தொழில்துறை அமைப்பு கோவை குறிச்சி சிட்கோவில் ரூ. 9.97 கோடி மதிப்பில் 'சிட்டார்க் ஈ.வி. அறக்கட்டளை' என்கின்ற வளாகத்தை அமைக்க உள்ளது. இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இது அரசு தனியார் கூட்டு முயற்சியில் உருவாகும் வளாகம். இதற்குத் தேவையான நிதிகளில் 90 % தமிழக அரசும் 10 % தனியார் நிறுவனங்களும் வழங்குவர். தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து உருவாகும் இந்த மையத்தில் அதற்குத் தேவையான உபகரணங்கள் மற்றும் கட்டமைப்புகளை ஏற்படுத்தி ஒரு 6 மாத காலத்திற்குள் இந்நிலையத்தை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இப்படிப்பட்ட ஒரு பொது சோதனை வளாகம் அமைவதால் மின்சார வாகன பாகங்கள் உற்பத்தியில் கால் எடுத்து வைக்கும் சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மிகப்பெரும் உதவியாக அமையும்.