கோவையின் இந்த 3 தேவைகள் பற்றி சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவாருங்கள் - எம்.எல்.ஏ.வுக்கு வேண்டுகோள் விடுத்த மக்கள்
- by David
- Mar 17,2025
வெள்ளலூர் குப்பை கிடங்கு பிரச்சனை, பாதியில் நிற்கும் வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய திட்டம் மற்றும் வெள்ளலூர் பேருந்து நிலையம் வரை மெட்ரோ ரயில் திட்டத்தை மாற்றி அமைப்பது குறித்து நடைபெற்று கொண்டிருக்கும் சட்டமன்ற கூட்டத்தொடரில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவாருங்கள் என குறிச்சி - வெள்ளலூர் மாசு தடுப்பு கூட்டுக்குழு தரப்பில் கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் தாமோதரனுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
தாமோதரன் எம்.எல்.ஏ.விற்கு அவர்கள் எழுதிய கடிதத்தில் வெள்ளலூர் குப்பை கிடங்கால் பாதிப்புகள் குறைந்தபாடு இல்லை. கடும் துர்நாற்றம், கடுமையான சுகாதார சீர்கேடு ஆகியவையால் பொதுமக்கள் அவர்களது வீடுகளில் பயன்படுத்தும் ஆழ்குழாய் நீர் மஞ்சள் நிறமாகி பயன்படுத்தமுடியாத சூழ்நிலை உள்ளது என குறிப்பிட்டுள்ளனர்.
இதற்கு தீர்வு காணும் விதத்தில், கோவை மாநகராட்சியால் தினசரி சேகரிக்கப்படும் குப்பைகளை அந்தந்த மண்டலங்களில் திடக்கழிவு மேலாண்மை செய்து குப்பை கிடங்கை இட மாற்றம் செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
நிறுத்திவைக்கப்பட்டுள்ள வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய வளாகத்தில் லாரி பேட்டை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்ற சூழல் இருக்க, அதற்கு அனுமதி கொடுக்கக்கூடாது எனவும், அதற்கு பதிலாக பேருந்து நிலைய திட்டத்திற்கான கட்டுமான பணிகளை மீண்டும் உடனடியாக துவக்க நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என சட்டப்பேரவையில் தங்கள் சார்பாக எடுத்துரைக்கவும் கேட்டுக்கொண்டனர்.
வெள்ளலூர் பேருந்து நிலையம் வரை மெட்ரோ ரயில் வருமென திட்டமிடப்பட்டிருந்த நிலையில் அதை மாற்றி அமைத்து இந்த பகுதி முற்றிலுமாக தவிர்க்கப்பட்டுள்ளது. இதை மீண்டும் பழைய நிலைக்கே கொண்டுவரவேண்டும் என கேட்டுக்கொண்ட அவர்கள், இந்த விஷயங்கள் பற்றி தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் சட்டமன்ற கூட்டத்தொடரில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்து பேச வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.